உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்காமல் கவர்னரை தடுப்பது யார்? - சஞ்சய் ராவத் கேள்வி
உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்க விடாமல் கவர்னரை தடுப்பது யார்? என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து, பாரதீய ஜனதாவுடன் கூட்டணியை முறித்து கொண்டு, கொள்கையில் முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து நவம்பர் 28-ந் தேதி ஆட்சி அமைத்து முதல்-மந்திரி ஆன சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.எல்.சி.யாகவோ இல்லாமல் இருக்கிறார்.
அவர் தனது முதல்-மந்திரி பதவியை காப்பாற்றி கொள்ள 6 மாதத்திற்குள், அதாவது அடுத்த மாதம்(மே) 28-ந் தேதிக்குள் எம்.எல்.சி. அல்லது எம்.எல்.ஏ. ஆக வேண்டும்.
மாநிலத்தில் வருகிற 24-ந் தேதி நடக்க இருந்த எம்.எல்.சி. தேர்தல் மூலம் தனது முதல்-மந்திரி பதவியை காப்பாற்றிக் கொள்ளலாம் என உத்தவ் தாக்கரே கருதி இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
கவர்னருக்கு பரிந்துரை
இதைத்தொடர்ந்து கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருக்கும் 2 எம்.எல்.சி. பதவிகளில் ஒன்றில் உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்க வலியுறுத்தி மாநில மந்திரி சபை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு பரிந்துரை செய்தது.
ஆனால் உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்காமல் கவர்னர் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறார். இது தொடர்பாக கவர்னரை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மறைமுகமாக சாடி இருந்தார்.
இந்தநிலையில், நேற்று உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்காமல் கவர்னரை தடுப்பது யார்? என அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:-
இது அரசியலுக்கான நேரம் அல்ல. மத்திய அரசும், மாநில அரசும் ஒருவருக்கொருவர் சண்டையிட கூடாது. தற்போது அரசியலில் ஈடுபடுபவர்கள் தேசவிரோதிகள். அவர்கள் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டாம். உத்தவ் தாக்கரே அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பவர்களை நான் எச்சரிக்கிறேன்.
டெல்லியோ அல்லது மராட்டிய ராஜ்பவனோ மே 27-ந் தேதிக்கு பிறகும் உத்தவ் தாக்கரே மராட்டியத்தின் முதல்-மந்திரியாக இருப்பதை தடுக்க முடியாது.
பாரதீய ஜனதா உடனான கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் தொடர்பு ஒரு ரகசியம் அல்ல. ஆனால் இந்த நேரத்தில் முதல்-ம ந்திரியின் பின்னால் உறுதியாக நிற்பதை நாம் காண விரும்பும் காலம் இது. இவ்வாறு அவர் கூறினார்.
பாரதீய ஜனதா பதிலடி
இந்தநிலையில், சஞ்சய் ராவத்தின் கேள்விக்கு பாரதீய ஜனதா பதிலடி கொடுத்து உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் எம்.எல்.ஏ.வும், முன்னாள் மந்திரியுமான ஆஷிஸ் செலார் கூறுகையில், “அவர்களின் (சிவசேனா) சொந்த லாபத்திற்காக கவர்னருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இதுவல்ல. கவர்னர் சரியான நேரத்தில் ஒரு முடிவை எடுப்பார்.
இந்த விஷயத்தில் அமைதியின்மை அவசியமில்லை” என்றார்.
Related Tags :
Next Story