பாதராயனபுரா வன்முறை தொடர்பாக எடியூரப்பாவிடம் அறிக்கை தாக்கல் - கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவு


பாதராயனபுரா வன்முறை தொடர்பாக எடியூரப்பாவிடம் அறிக்கை தாக்கல் - கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவு
x
தினத்தந்தி 21 April 2020 5:28 AM IST (Updated: 21 April 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

பாதராயனபுரா வன்முறை தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்தனர். அப்போது எடியூரப்பா வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

பெங்களூரு, 

பெங்களூரு பாதராயனபுரா வார்டில் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தவும், மருத்துவ பரிசோதனை நடத்தவும் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளும், ஆஷா திட்ட ஊழியர்களும் சென்றனர். அவர்களை தாக்கியதுடன், போலீஸ் சோதனை சாவடியை அடித்து நொறுக்கி 150-க்கும் மேற்பட்டோர் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் படி முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று முன்தினம் இரவே போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள வீட்டில் முதல்-மந்திரி எடியூரப்பாவை ேநற்று காலை போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் ஆகியோர் சந்தித்து பேசினர்.

விசாரணை அறிக்கை தாக்கல்

அப்போது பாதராயனபுரா வார்டில் வன்முறை ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும், போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் விளக்கி கூறினர். மேலும் வன்முறை தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை அவர்கள் எடியூரப்பாவிடம் தாக்கல் செய்தனர்.

இதைதொடர்ந்து ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீதும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி எடியூரப்பா அவர்களுக்கு உத்தரவிட்டார். போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பாதராயனபுரா பகுதிக்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் வன்முறை நடந்த பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். அதைதொடர்ந்து பாதராயனபுரா பகுதி முழுவதும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

போலீசாருடன் ஆலோசனை

பின்னர் மந்திரி பசவராஜ் பொம்மை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மத்தியில் பேசினார். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.

அதன் பிறகு ஜே.ஜே.நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற மந்திரி பசவராஜ் பொம்மை, வன்முறை தொடர்பாக கைதானவர்கள் விவரங்களையும், அவர்கள் மீது எந்தந்த பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது பற்றியும் போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக போலீசாருடன் அவர் கலந்தாலோசித்தார்.

போலீஸ் மந்திரி பேட்டி

இந்த ஆலோசனைக்கு பிறகு போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாதராயனபுராவில் 19 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணி நடந்தது. அப்போது சிலர் அதிகாரிகள், ஊழியர்கள் மீது கற்களை வீசி தாக்கியதுடன், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனர். இந்த வன்முறை தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் முழுவிவர அறிக்கையை தாக்கல் செய்துள்ளோம். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

வன்முறை தொடர்பாக 54 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த வன்முறை சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இதில் தொடர்புடைய பலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை எக்காரணம் கொண்டும் தப்பவிடக் கூடாது என்றும், அவர்களை கைது செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

பின்னணியில் யார்-யார்?

இந்த வன்முறை சம்பவத்துக்கு பின்னணியில் யார்-யார் உள்ளார்கள், யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த வன்முறை நடந்தது என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதராயனபுராவில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நாங்கள் தற்போது எடுக்கும் நடவடிக்கை மாநிலம் முழுவதும் இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடை பெறாமல் இருக்க ஒரு முன் மாதிரியாக இருக்கும்.

முழுவதுமாக சீல் வைக்கப்பட்டு உள்ள திப்பு நகர், பாபுஜிநகர், பாதராயனபுரா ஆகிய பகுதிகளில் மாநகராட்சி மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அரசியல்வாதிகள் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் சிலர் இந்த வன்முறையில் ஈடுபட்டிருக்கலாம். ஜமீர்அகமது கான் எம்.எல்.ஏ. தலைமையில் நடக்கும் அரசு இது இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மக்களை வன்முறையில் ஈடுபட தூண்டியவர்கள் யார் என்பது விசாரணை முடிவில் தெரியவரும். மாநில மக்களுக்கு ஊரடங்கு என்றால் என்ன?, எதனால் சீல் வைக்கப்பட்டு உள்ளது, போலீசாரின் அதிகாரம் என்ன என்பது பற்றி தெரியப்படுத்துவோம்.

வேடிக்கை பார்க்கமாட்டோம்

வன்முறையில் ஈடுபட்டவர்களையும், இந்த வன்முறைக்கு காரணமானவர்களையும் பார்த்து கர்நாடக அரசும், போலீசாரும் கைக்கட்டி கொண்டு வேடிக்கை பார்க்கமாட்டோம். இந்த விவகாரத்தில் போலீசார் சுதந்திரமாக செயல்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story