குமரியில் கொரோனாவில் இருந்து மேலும் ஒருவர் குணமடைந்தார் 14 பேருக்கு தீவிர சிகிச்சை
குமரியில் கொரோனாவில் இருந்து மேலும் ஒருவர் குணமடைந்தார். 14 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்,
குமரியில் கொரோனாவில் இருந்து மேலும் ஒருவர் குணமடைந்தார். 14 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா
கொரோனாவுக்கு குமரி மாவட்டத்தில் முதன் முதலில் நாகர்கோவில் டென்னிசன் ரோடு, வெள்ளாடிச்சிவிளை, தேங்காப்பட்டணம், நாகர்கோவிலை அடுத்த மணிக்கட்டிப் பொட்டல் அனந்தசாமிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் மூலமாக அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள், பக்கத்து வீடுகளைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று பரவியது.
அவர்கள் அனைவரும் தற்போது ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியின் கொரோனா நோயாளிகள் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த இடம், தடை செய்யப்பட்ட பகுதிகளாக இருந்து வருகின்றன. இந்த பகுதி மக்கள் வெளியே செல்லவும், வெளியில் உள்ள மக்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கும் அனுமதி இல்லை.
சமூக தொற்றாக மாறவில்லை
குமரியில் 16 பேருக்கு கொரோனா பரவியதை தொடர்ந்து அவர்களுடன் முதல்நிலை, இரண்டாம் நிலையில் தொடர்பில் இருந்தவர்கள், பழக்கப்பட்டவர்கள், தொடர்ந்து சில நாட்கள் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் ஆகியவற்றால் சிரமப்படுபவர்கள், மாவட்டம் முழுவதும் நிமோனியா தொற்று உள்ளவர்கள் என பலரிடமும் ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை பரிசோதனைக்காக சேகரித்து கொரோனா தொற்று பரிசோதனைகளையும் டாக்டர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
16 பேரில் அனந்தசாமிபுரத்தைச் சேர்ந்த கொரோனா நோயாளியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு கடைசியாக அதாவது கடந்த 14-ந் தேதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு குமரியில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் இந்த நோய் சமூகத்தொற்றாக மாறவில்லை என்பதும் குமரி மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.
மேலும் ஒருவர் குணமடைந்தார்
இந்தநிலையில் முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவருக்கு கொரோனா இல்லை என்பது இரண்டு முறை நடந்த பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவரை தவிர்த்து முதலில் கொரோனா கண்டறியப்பட்ட 4 பேருக்கும் மீண்டும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்த 2 பேரில் ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டிருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இவருடைய மனைவியும் இதே ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு நீங்கவில்லை.
தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ள தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்தவருக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதிலும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானால் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ் டிரைவர்
இதற்கிடையே ஏற்கனவே கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ள வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவரின் 88 வயது பாட்டிக்கு நேற்று மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கும் கொரோனா தொற்று நீங்காமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கிள்ளியூர் பகுதியைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் 12 நாட்களாக இருந்து வரும் இருமலின் காரணமாக தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Related Tags :
Next Story