மே 3-ந் தேதி வரை அமலில் இருக்கும்: கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை - மந்திரிசபை கூட்டத்தில் முடிவு


மே 3-ந் தேதி வரை அமலில் இருக்கும்: கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை - மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 21 April 2020 5:51 AM IST (Updated: 21 April 2020 5:51 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தளர்த்துவது இல்லை என்றும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், 20-ந் தேதிக்கு பிறகு சில தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்பின்னர் தகவல், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், விவசாய பணிகள், கிராமப்புறங்களில் செயல்படும் நிறுவனங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி முதல்-மந்திரி எடியூரப்பா, கடந்த சில நாட்களுக்கு முன்பு, 21-ந் தேதி (அதாவது இன்று) முதல் ஊரடங்கை தளர்த்தி கர்நாடகத்தில் தகவல், உயிரி தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற தொழில் நிறுவனங்களை திறக்க அனுமதி அளிப்பதாக அறிவித்தார். ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவை ஒரு நாள் ஒத்திவைப்பதாகவும், 20-ந் தேதி (நேற்று) மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசித்து ஊரடங்கு தளர்வு குறித்து முடிவு எடுப்பதாகவும் முதல்-மந்திரி நேற்று முன்தினம் அறிவித்தார்.

மந்திரிசபை கூட்டம்

இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பேசிய பெரும்பாலான மந்திரிகள், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதை தடுக்க வேண்டுமென்றால் ஊரடங்கு உத்தரவை மே 3-ந் தேதி வரை நீட்டிப்பது நல்லது என்று ஆலோசனை தெரிவித்தனர். இதையடுத்து கர்நாடகத்தில் ஊரடங்கை மே 3-ந் தேதி வரை நீட்டிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. பின்னர் மந்திரிசபையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

“கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிலவற்றுக்கு தளர்வு அளிக்க முன்பு முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மந்திரிசபையில் விரிவாக விவாதிக்கப்பட்டது. கொரோனாவை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஊரடங்கு உத்தரவை வருகிற மே மாதம் 3-ந் தேதி வரை நீட்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி எந்த தொழிலுக்கும் ஊரடங்கில் தளர்வு கிடையாது.

தற்போது உள்ள நிலையே தொடரும். அடுத்த 4, 5 நாட் களுக்கு பிறகு மத்திய அரசு வழிகாட்டுதல் ஏதாவது வழங்கினால் அதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுப்பார். தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கினால், அவற்றுக்கு மூலப்பொருட்களை கொண்டு வருவது, அவற்றை வெளி மாவட்டங்களில் இருந்து எடுத்து வருவது போன்ற சிக்கல்கள் இருக்கிறது.

தொழில் நிறுவனங்களுக்கு ஒன்றோடு ஒன்று தொடர்பு இருக்கிறது. அதனால் ஊரடங்கை தளர்த்துவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு பாதராயனபுராவில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். போலீசாரை சுதந்திரமாக செயல்பட அரசு எப்போதுமே அனுமதிக்கிறது. அவர்களின் கைகளை அரசு கட்டவில்லை.”

இவ்வாறு மந்திரி மாதுசாமி கூறினார்.

Next Story