விழுப்புரம் மாவட்டத்தில், 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது


விழுப்புரம் மாவட்டத்தில், 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 21 April 2020 3:45 AM IST (Updated: 21 April 2020 6:44 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட மேலும் 3 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு சேர்த்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் நேற்று முன்தினம் வரை 33 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 17 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டெல்லியை சேர்ந்த வாலிபர் மட்டும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றப்பட்டார்.

மீதமுள்ள 13 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 2 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று 208 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வரப்பெற்றது. இவர்களில் 3 பேருக்கு மட்டும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒருவர் விழுப்புரம் மாசிலாமணிபேட்டையை சேர்ந்த டீ மாஸ்டர், மற்ற 2 பேரும் பெண்கள். இவர்கள் 2 பேரும் விழுப்புரம் கந்தசாமி லே-அவுட், பூந்தமல்லி தெரு பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் இவர்கள் டெல்லி மாநாட்டுக்கு சென்றுவிட்டு விழுப்புரம் திரும்பி வந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் 3 பேரோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 1,667 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 36 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,365 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 266 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இன்னும் வரவில்லை. மேலும் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 1,735 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

Next Story