தேனியில் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை தொடங்கியது
தேனியில் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை தொடங்கியது.
தேனி,
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை ஆய்வுக்கூடம் அமைந்துள்ளது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என ரத்தம், சளி மாதிரி எடுத்து இந்த ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிவு தெரிவதற்கு 3 மணி நேரம் வரை ஆகிறது.
இதற்கிடையே ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை விரைவில் கண்டறியும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவிகள் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டு, மாவட்டம்வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கருவிகள் மூலம் 25 நிமிடத்தில் கொரோனா பாதிப்பு உள்ளதா என அறிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் தேனி மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 900 ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவிகள் கொண்டுவரப்பட்டன. இந்த கருவிகள் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை தவிர மாவட்டத்தில் பிற இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தேனி, பொம்மையகவுண்டன்பட்டி, போடி, பெரியகுளம், சின்னமனூர், க.புதுப்பட்டி, இ.புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இதையடுத்து ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவிகளை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு நேற்று பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பயிற்சியை தொடர்ந்து ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் பணியை சுகாதாரத்துறையினர் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் ஒரு வார காலமாக காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முதற்கட்டமாக பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்பார்வை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story