போலீசார் தாக்கியதாக கூறி சாலையோர வியாபாரிகள் மறியல்
போலீசார் தாக்கியதாக கூறி சாலையோர வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்-திருச்சி சாலையில் கல்லறைமேடு அருகே நேற்று சாலையோரத்தில் தள்ளுவண்டிகளில் வைத்து சில வியாபாரிகள் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அங்கு வந்தனர். மேலும் ஊரடங்கு அமலில் இருப்பதை சுட்டிக்காட்டி சாலையோர வியாபாரிகளை போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
இதனால் போலீசாருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசார் தாக்கியதாகவும், சோபியா என்ற பெண்ணுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறி வியாபாரிகள் போராட்டத்தில் இறங்கினர். மேலும் சாலையின் குறுக்காக தள்ளுவண்டிகளை நிறுத்தியும், கற்களை வைத்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்றவர்கள், சிரமப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் அங்கு விரைந்து வந்தார். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தார்.
அதன்பின்னரே வியாபாரிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story