ஆம்னி பஸ் டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா


ஆம்னி பஸ் டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 April 2020 3:45 AM IST (Updated: 21 April 2020 7:36 AM IST)
t-max-icont-min-icon

ஆம்னி பஸ் டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் டெல்லி, வெளிமாநிலத்துக்கு சென்று வந்தவர்கள், அவர்களின் உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்மூலம் நேற்று முன்தினம் வரை மொத்தம் 74 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதில் முதியவர் ஒருவர் இறந்து விட்டார். அதேநேரம் 27 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இந்த நிலையில் நேற்று திண்டுக்கல்லை சேர்ந்த 8 பேர் உள்பட மேலும் 13 பேர் குணம் அடைந்தனர். இதையடுத்து கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து அவர்கள் நேற்று வீட்டுக்கு திரும்பினர். எனினும், தொடர்ந்து 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதன்மூலம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தேவத்தூரை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அந்த பெண் சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ்சில் ஊருக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பஸ்சை ஓட்டி வந்த டிரைவர், பயணிகள் என மொத்தம் 34 பேரை கண்டுபிடித்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை முடிவு வெளியானது. அதில் ஆம்னி பஸ்சின் டிரைவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. 41 வயதான இவர் அம்பிளிக்கை அருகேயுள்ள கொசவப்பட்டியை சேர்ந்தவர் ஆவார். யார் மூலம் இவருக்கு தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை. எனவே, அவருடைய குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது.

அதேபோல் திண்டுக்கல்லை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவருக்கு அவருடைய உறவினர்கள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டிரைவர் மற்றும் அந்த பெண் ஆகியோர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 76 ஆக உயர்ந்தது.

Next Story