பெரம்பலூர் மாவட்டத்தில் சுங்கச்சாவடி, அலுவலகங்கள் செயல்பட்டன
பெரம்பலூர் மாவட்டத்தில் சுங்கச்சாவடி, எல்.ஐ.சி., சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டன.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் சுங்கச்சாவடி, எல்.ஐ.சி., சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டன.
சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடை முறையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 20-ந் தேதி முதல் நாடு முழுவதும் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். மத்திய அரசின் எல்.ஐ.சி. அலுவலகம், தமிழகத்தில் சார்-பதிவாளர் அலுவலகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் அந்த வழியாக சென்ற நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூரில் உள்ள 2 எல்.ஐ.சி. அலுவலகமும், பாடாலூரில் உள்ள ஒரு எல்.ஐ.சி. அலுவலகமும் நேற்று திறக்கப்பட்டு, குறைந்த பட்ச ஊழியர்களை கொண்டு செயல்பட்டது. அங்கு ஒரு கவுண்ட்டரில் இருந்து அதிகாரிகள் வாடிக்கையாளர்களிடம் காப்பீடு தவணை தொகையை வாங்கினர்.
எல்.ஐ.சி. அலுவலகத்தில் கூட்டம்
மேலும் ஊழியர்கள் பாதுகாப்பு கவசம் அணிந்திருந்து, வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெற்றனர். ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு நேற்று தான் மீண்டும் எல்.ஐ.சி. அலுவலகம் திறக்கப்பட்டதால், பணம் கட்டுவதற்கு அலுவலகத்தின் வெளியே சமூக இடைவெளியை பின்பற்றாமல் வாடிக்கையாளர்கள் கூட்டம் காணப்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமூக இடைவெளி விட்டு நிற்க வைத்து, பணத்தை பெற்றனர். மேலும் அலுவலகத்தில் ஒரு கவுண்ட்டர் மட்டும் செயல்பட்டதால் வாடிக்கையாளர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதே போல் நேற்று முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், செட்டிகுளம், வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. ஆனால் பத்திரங்களை பதிவு செய்ய பொதுமக்கள் யாரும் வராததால் சார்-பதிவாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் மட்டும் தங்களது பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story