முன்விரோத தகராறில், வாலிபரை கொலை செய்த 4 பேர் கைது - தங்கையுடன் பழகியதால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம்


முன்விரோத தகராறில், வாலிபரை கொலை செய்த 4 பேர் கைது - தங்கையுடன் பழகியதால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 21 April 2020 4:30 AM IST (Updated: 21 April 2020 9:56 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் முன்விரோத தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டிக்கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்,

வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் தெருவை சேர்ந்தவர் உதய் என்கிற உதயகுமார் (வயது 34). இவர் இன்பெண்டரி சாலையில் மனமகிழ் மன்றம் நடத்தி வந்தார். 3 பெண்களை திருமணம் செய்த உதயகுமார் கருத்து வேறுபாடு காரணமாக அவர்களை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் உதயகுமார் மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். வீட்டின் அருகே வந்தபோது எதிரே மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் திடீரென உதயகுமாரை வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து 4 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

தகலறிந்த வேலூர் தெற்கு போலீசார் அங்கு சென்று உதயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த இமானுவேல் (26), நிர்மல் (23), அந்திரேஷ் (34), நவீன் (30) ஆகியோர் உதயகுமாரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வேலூர்-ஆரணி சாலை கண்மருத்துவமனை அருகே 4 பேரும் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் 4 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், உதயகுமார் கடந்த சில மாதங்களாக இமானுவேல் தங்கையுடன் பழகி வந்துள்ளார். ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து விட்டு 4-வதாக தங்கையுடன் பழகியது இமானுவேலுக்கு பிடிக்கவில்லை. எனவே தங்கையுடன் பேசுவதை, பழகுவதை கைவிடும்படி உதயகுமாரிடம் தெரிவித்து உள்ளார். ஆனாலும் அவர் தொடர்ந்து பழக்கத்தில் இருந்து வந்துள்ளார்.

அதனால் ஆத்திரம் அடைந்த இமானுவேல் நண்பர்கள் மற்றும் உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த நிர்மல், அந்திரேஷ், நவீன் ஆகியோருடன் சேர்ந்து உதயகுமாரை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து 4 பேரும் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Next Story