ஆரணி அருகே, பயிரிட்ட கத்தரிக்காய்களுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் குமுறல்
ஆரணி அருகே பயிரிட்ட கக்தரிக்காய்களுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் குமுறுகின்றனர்.
ஆரணி,
ஆரணியை அடுத்த அடையபுலம், சேவூர், மெய்யூர், அக்ராபாளையம், அரியப்பாடி, வெட்டியாந்தொழுவம், ஆதனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் 6 மாத பயிராகக் கத்தரிக்காய் செடிகளை பயிரிட்டுள்ளனர். செடிகளில் கத்தரிக்காய்கள் நன்கு விளைந்துள்ளன. அதை, அறுவடை செய்து, விற்பனைக்குக் கொண்டு வந்தால், அதற்கேற்ற விலை கிடைக்கவில்லை, எனக்கூறி விவசாயிகள் குமுறுகிறார்கள்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-
எனக்கு சொந்தமாக 70 சென்ட் நிலத்தில் கத்தரிக்காய் செடிகளை கடந்த கார்த்திகை மாதம் நடவு செய்தேன். கத்தரி செடிகள் நன்றாக வளர வேண்டும், பூச்சிகள் தாக்கக் கூடாது, கத்தரிக்காய்களுக்கு நன்றாக நிறம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாதமும் மருந்து தெளித்தேன். தற்போது செடிகளில் கத்தரிக்காய்கள் நன்கு விளைந்து அறுவடை செய்யும் பருவத்தில் உள்ளன.
தற்போது கொரோனா ஊரடங்கால் செடிகளில் இருந்து கத்தரிக்காய்களை அறுவடை செய்ய 25 கிலோவில் இருந்து 50 கிலோ வரை ரூ.50 முதல் ரூ.100 வரை தொழிலாளர்களுக்கு கூலி வழங்க வேண்டி உள்ளது. காய்களை அறுவடை செய்ய போதிய ஆட்கள் வருவதில்லை. அப்படியே ஒருவேளை கத்தரிக்காய்களை அறுவடை செய்து விற்பனைக்காக எடுத்துச்சென்றாலும் எங்களுக்குப் போதிய விலை கிடைக்கவில்லை.
வியாபாரிகள் தவிட்டுக்குக் கேட்பதுபோல் கேட்கிறார்கள். இதனால் நாங்களே நேரடியாக கத்தரிக்காய்களை விற்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. பொதுமக்கள் நல்ல கத்தரிக்காய்களை மட்டும் வாங்கி விடுகிறார்கள். சொத்தை, அணில் கடித்தவைகளை யாரும் வாங்குவதில்லை. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
இதற்கு முன்பு அப்படியல்ல, நாங்கள் காய்கறி மொத்த விற்பனை கடையில் 10 சதவீத கமிஷன் அடிப்படையில் ஒட்டு மொத்த கத்தரிக்காய்களை கொடுத்து விட்டு பணத்தைப் பெற்றுச்செல்வோம். இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. தற்போது நேரடி விற்பனையில் ஈடுபடுவதால் நல்ல கத்தரிக்காய்கள் மட்டும் விற்கிறது. சொத்தை, அணில் கடித்தவைகளை தவிர்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story