சாராயம் காய்ச்சுவதை தடுக்க மளிகை-பழக்கடைகளை கண்காணிக்கும் போலீசார் மொத்தமாக வாங்கிச் சென்றவர்கள் குறித்து விசாரணை
சாராயம் காய்ச்சுவதை தடுக்க மளிகை, பழக்கடைகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மொத்தமாக வாங்கிச் சென்றவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரமங்கலம்,
சாராயம் காய்ச்சுவதை தடுக்க மளிகை, பழக்கடைகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மொத்தமாக வாங்கிச் சென்றவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் பால், காய்கறி, மளிகை, பழக்கடைகள் போன்றவை மதியம் வரை திறக்கப்பட்டு தட்டுப்பாடு இல்லாமல் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகளில் பொருள் வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நின்று பொருள் வாங்க அறுவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த பணிகளில் போலீசார் மற்றும் பல துறை சார்ந்த அதிகாரிகள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பழக்கடைகள் கண்காணிப்பு
ஊரடங்கு அறிவிக்கப்பட் டது முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. மேலும் பாதுகாப்பு இல்லாத கடைகளில் இருந்த மது பாட்டில்கள் குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. டாஸ்மாக் கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் சில நாட்கள் வரை மதுப்பிரியர்கள் மது கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். அதன் பிறகு மதுவை பலர் மறந்துவிட்டனர்.
ஆனால் ஒரு சிலர் டாஸ்மாக் கடைகள் இல்லாத சூழ்நிலையை பயன் படுத்தி சாராயம் காய்ச்சும் வேலையை தொடங்கி உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு திறக்கப்பட்டிருந்த பெரிய மளிகை கடைகளில் இருந்து சர்க்கரை, கடுக்காய் போன்றவற்றை சாராய ஊறல் போடுவதற்காக பலர் மொத்தமாக வாங்கி சென்றுள்ளனர். அதே போல பழக்கடைகளில் இருந்து அழுகிய நிலையில் ஒதுக்கப்பட்ட பழங்களும் கூடை கூடையாக பலர் அள்ளிச் சென்றுள்ளனர். இந்த தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட போலீசார் ஒவ்வொரு பகுதியிலும் இப்படி ஒரே நேரத்தில் அதிகமாக சர்க்கரை, கடுக்காய், பழங்கள் வாங்கிச் சென்றவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து அவர்களை தொடர்ந்து கண்காணித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து சாராயம் காய்ச்ச முயற்சி செய்பவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story