கோவையில், வவ்வால்கள் இருக்கும் இடத்தில் கிருமி நாசினி தெளிப்பு - மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
கோவையில் வவ்வால்கள் இருக்கும் இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
கோவை,
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காரணம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சாலைகள், தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வவ்வால்கள் மூலம் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவுவதாக தகவல் பரவியது. இதனால் வவ்வால்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் வசித்து வரும் பொதுமக்கள் இடையே பீதி ஏற்பட்டது. இது தொடர்பாக ஆய்வு செய்து பொதுமக்களின் அச்சத்தை போக்க மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
கோவை மாநகர பகுதியில் வ.உ.சி. பூங்காவில்தான் வவ்வால்கள் அதிகம் உள்ளன. எனவே அங்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் பொதுமக்கள் யாரும் வவ்வால்கள் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
வவ்வால்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் பொதுமக்களிடம் இருந்து அச்சம் போகவில்லை. எனவேதான் மாநகர பகுதியில் எங்கு எல்லாம் வவ்வால்கள் இருக்கிறதோ அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் பழங்களை வாங்கி சாப்பிடும்போது, பறவைகள் கடித்ததை வாங்க வேண்டாம்.
அதுபோன்று எக்காரணத்தைக்கொண்டும் பழங்களை கழுவாமல் சாப்பிடக் கூடாது. மஞ்சள் கலந்த தண்ணீரில் பழங்களை சிறிது நேரம் போட்டுவிட்டு, அதை எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவிசாப்பிட்டால் அதன் மேல் பகுதியில் இருக்கும் கிருமிகள் இறந்து விடும். அதை பொதுமக்கள் செய்தால் பாதுகாப்பாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story