கொரோனா தொற்று பீதி: பத்திர எழுத்தர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் - சார் பதிவாளர் அலுவலகங்கள் வெறிச்சோடின
கொரோனா தொற்று பீதி காரணமாக பத்திர எழுத்தர்களின் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள் வெறிச்சோடின.
கோவை,
கோவை மாவட்டத்தில் 17 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. விசேஷ நாட்களில் இந்த அலுவலகங்களில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் பத்திரங்கள் வரை பதிவாகும். இதன் மூலம் மாதத்துக்கு ரூ.450 கோடி வரை வருமானம் கிடைக்கும்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த 24-ந் தேதி முதல் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படவில்லை.
இதற்கிடையில் சார் பதிவாளர் அலுவலகங்கள் நேற்று முதல் வழக்கம் போல செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் திறக்கப்பட்டன. ஊழியர்களும் பணிக்கு வந்திருந்தனர். ஆனால் ஒரு பத்திரம் கூட பதிவு செய்யப்படவில்லை. இதற்கு காரணம் பத்திர எழுத்தர்கள் சங்கத்தினர் சார் பதிவாளர் அலுவலகங்கள் நேற்று திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகளை புறக்கணித்து நேற்று அலுவலகத்துக்கு வரவில்லை.
இதுகுறித்து கோவை மாவட்ட பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத் தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-
சார் பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் நேரடியாக பத்திரங்களை பதிவு செய்வதில்லை. பத்திரம் எழுதுபவர்கள் மூலமாகத் தான் அவை பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் தற்போது கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.
இந்த நிலையில் பத்திரங்கள் பதிவு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது கொரோனா மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் பத்திரம் பதிவு செய்தால் அவருடன் குறைந்தது 10 பேர் வருவார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது என்பது கடினமான காரியம். மேலும் பத்திர பதிவின்போது கைவிரல் ரேகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படுகிறது. இதற்கு ஒரேயொரு எந்திரம் தான் உள்ளது. எல்லோரும் அந்த ஒரு எந்திரத்தை பயன்படுத்துவதின் மூலம் கொரோனா பரவுவதற்கு வாய்ப்புள்ளது.
மேலும் பத்திர பதிவுக்கான பணம், அடையாள அட்டைகள் ஆகியவற்றை வாங்கி அலுவலகத்தில் கொடுக்கும்போது கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே மத்திய அரசு அறிவித்தபடி மே 3-ந் தேதி வரை விடுமுறை நாட்கள் போக மீதி 5 நாட்கள் தான் நல்ல நாட்களாக உள்ளன. அந்த நாட்களில் தான் பத்திரங்கள் பதிவு செய்யப்படும். இந்த 5 நாட்களுக்கு மக்களை வரவழைத்தால் கொரோனா பரவுவதற்காக வாய்ப்பாக அமைந்து விடும்.
எனவே மே 3-ந் தேதிக்கு பிறகு சார்பதிவாளர் அலுவலகங்களை திறக்கலாம் என்று தமிழக பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத்தினர் ஏற்கனவே பலமுறை முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் அதையும் மீறி சார் பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால் எங்களுக்கு இதில் உடன்பாடு இல்லாததால் நாங்கள் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து விட்டோம். நாங்கள் அலுவலகங்களுக்கு செல்லாததால் ஒரு பத்திரம் கூட பதிவாகவில்லை. எனவே தமிழக அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று மே 3-ந் தேதி வரை பத்திரப் பதிவை தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story