ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் போலீசார், தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை


ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் போலீசார், தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 21 April 2020 12:49 PM IST (Updated: 21 April 2020 12:49 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் போலீசார், தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரியை சேர்ந்த 9 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதில் 4 பேர் குணமடைந்து கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பினர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரிசோதனை முடிவை உடனடியாக அறிய ரேபிட் டெஸ்ட் கிட் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நீலகிரிக்கு முதல் கட்டமாக 300 ரேபிட் டெஸ்ட் கிட் வந்து உள்ளது. அதை தொடர்ந்து ஊட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட காந்தல் பகுதியில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை முகாம் நேற்று தொடங்கியது. அப்பகுதியில் பணிபுரிந்து வரும் போலீசார், ஊர்க்காவல் படையினர், தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் கொரோனா அறிகுறி தென்பட்ட நபர்களின் வீடுகள் அருகே வசிக்கும் பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக சமூக இடைவெளி விட்டு போடப்பட்ட வட்டங்களில் அவர்கள் வரிசையாக நின்றனர். ஒவ்வொருத்தராக உள்ளே அனுமதிக்கப்பட்டு, பெயர் பதிவு செய்து நேரம் குறிக்கப்பட்டு, கருவி வழங்கப்பட்டது. முழு பாதுகாப்பு கவச உடை அணிந்தவர்கள் விரல் நுனியில் இருந்து ரத்தம் சேகரித்து கருவியில் விடப்படுகிறது. அந்த கருவியில் உள்ள திரையில் ஒரு கோடு வந்தால் கொரோனா பாதிப்பு இல்லை எனவும், 2 கோடுகள் வந்தால் கொரோனா தொற்று இருக்கிறது என்றும் உறுதி செய்யப்படுகிறது. 15 நிமிடங்களில் முடிவு தெரிந்துவிடும். இந்த கொரோனா பரிசோதனை முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்துக்கு 300 ரேபிட் டெஸ்ட் கிட் வந்து உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட சுகாதார பணியாளர்கள் மற்றும் போலீசார், தூய்மை பணியாளர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த கருவியில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானால், சம்பந்தப்பட்ட நபருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த கருவிகள் முடிந்ததும், கூடுதலாக கருவிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா பாதிக்கப்பட்ட 9 பேருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனையில், பாதிப்பு இல்லை. மற்ற 5 பேர் அடுத்த வாரம் குணம் அடைந்து திரும்புவார்கள். தமிழக அரசு அறிவுரையின் பேரில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து தெரிவிக்கப்படும். நீலகிரியில் அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது. அதிக விலைக்கு விற்றால் சம்பந்தப்பட்ட கடை குறித்து கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணில் தொடர்பு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story