மதுபான கடத்தலுக்கு உடந்தை: கைதான தாசில்தார் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் - கலெக்டர் அருண் அதிரடி


மதுபான கடத்தலுக்கு உடந்தை: கைதான தாசில்தார் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் - கலெக்டர் அருண் அதிரடி
x
தினத்தந்தி 21 April 2020 1:11 PM IST (Updated: 21 April 2020 1:11 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் மதுபான கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக தாசில்தார் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அருண் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.

புதுச்சேரி, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. புதுவையிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு நேரக்கட்டுப்பாடுடன் கடைகள் திறக்கப்படுகின்றன. மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் சீல் வைக்கப்பட்டன. இருப்பினும் புதுவை நகர் மற்றும் கிராமப்புறங்களில் மது வகைகள் தாராளமாக கிடைத்து வந்தன.

இதுகுறித்து புகார்கள் வந்ததையடுத்து மதுக்கடைகளில் உள்ள இருப்புகள் குறித்து ஆய்வு செய்ய தாசில்தார் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவினர் அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் மடுகரை மதுபான கடையில் ஆய்வு செய்த தாசில்தார் கார்த்திகேயன் அங்கிருந்து தனக்கு தேவையான மது பாட்டில்களை எடுத்துக் கொண்டதுடன், விற்பனை செய்வதற்கும் மது பாட்டில்களை எடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தாசில்தார் கார்த்திகேயன் மீது ஊரடங்கு உத்தரவை மீறுதல், தொற்று நோய் பரப்புதல், பேரிடர் காலத்தில் விதிமீறல், கலால் துறை சட்டத்தை மதிக்காதது உள்ளிட்ட 4 பிரிவுகளில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு தாசில்தார் கார்த்திகேயன் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் சம்பவம் நடந்த பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே மதுபானம் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க தவறியதாக பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனில்குமார், வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகிய இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

மது கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கைதான கலால்துறை தாசில்தார் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் பார்த்திபன், இளநிலை எழுத்தர்கள் சேதுராமன், செந்தில்ராஜ், டிரைவர்கள் கருணாமூர்த்தி, சுந்தர் ஆகிய 6 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அருண் அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக நெட்டப்பாக்கம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுனன், போலீஸ்காரர் ஜெயராமன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

மது கடத்தலுக்கு அதிகாரிகளே உடந்தையாக இருந்த சம்பவம் புதுவை அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story