சென்னையில் இருந்து நெல்லைக்கு சரக்கு வாகனத்தில் வந்த 24 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
சென்னையில் இருந்து நெல்லை மாவட்டத்துக்கு சரக்கு வாகனத்தில் வந்த 24 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
வள்ளியூர்,
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆவுடையாள்புரத்தை சேர்ந்த பலர் குடும்பத்துடன் சென்னையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அவர்கள் வேலையின்றி தவித்து வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வருவதற்காக சென்னையில் இருந்து சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர். ஆவுடையாள்புரத்தை சேர்ந்த ராஜமணி (வயது 41) தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 24 பேர் புறப்பட்டு வந்தனர்.
24 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நேற்று மதியம் வந்தபோது, அங்குள்ள சோதனை சாவடியில் இருந்த போலீசார் சரக்கு வாகனத்தை மறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சென்னையில் இருந்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ராதாபுரம் தாசில்தார் செல்வன், கிராம நிர்வாக அலுவலர்கள் கணேஷ்குமார் பாபு, ஸ்டால்வின், வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் அங்கு வந்து, சரக்கு வாகனத்தில் இருந்த 7 ஆண்கள், 6 பெண்கள், 6 சிறுவர்கள், 5 சிறுமிகள் என 24 பேரையும் வள்ளியூர் கோட்டையடியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் தனிமைப்படுத்தி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பின்னர் மருத்துவ குழுவினர், அந்த 24 பேரின் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story