ஆலங்குளம் அருகே ஊரடங்கில் விபத்து: கார் மோதி பெண்கள் உள்பட 3 பேர் பலி - புல் அறுக்க வயலுக்கு சென்றபோது பரிதாபம்


ஆலங்குளம் அருகே ஊரடங்கில் விபத்து: கார் மோதி பெண்கள் உள்பட 3 பேர் பலி - புல் அறுக்க வயலுக்கு சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 21 April 2020 11:30 PM GMT (Updated: 21 April 2020 7:00 PM GMT)

ஆலங்குளம் அருகே ஊரடங்கு நேரத்தில் கார் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சுரண்டை, 

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்து வீரகேரளம்புதூர் அருகே உள்ள அகரக்கட்டு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி சவரிமுத்து. அவருடைய மகன் ஜோன்ஸ் அந்தோணி (வயது 32). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். தற்போது அவர் புதிதாக கார் ஒன்று வாங்கியுள்ளார்.

அந்த காரில் நேற்று முன்தினம் முக்கூடலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று காலை 6 மணியளவில் ஊர் திரும்பினார். ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளத்தை கடந்து வீரகேரளம்புதூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கழுநீர்குளம் மெயின் ரோட்டில் 2 பெண்கள் உள்பட 3 பேர் புல் அறுக்க வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

கார் மோதி பலி

ஜோன்ஸ் அந்தோணி ஓட்டி வந்த கார் திடீரென நிலைதடுமாறி அவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் வயலுக்குள் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். இதனை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், ஊருக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டு பொதுமக்கள் திரண்டு வந்தனர். அதற்குள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அவர்களின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

தகவல் அறிந்ததும் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, வீரகேரளம்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் இதுதொடர்பாக ஊர் மக்களிடம் நடத்திய விசாரணையில் பலியான 3 பேரும், கழுநீர்குளம் சோழன் தெருவை சேர்ந்த மாடசாமி (59), கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த முத்தையா மனைவி துரைச்சி (55), பாண்டியன் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி பொன்னம்மாள் (60) என்பது தெரியவந்தது.

போலீசில் சரண்

3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த ஜோன்ஸ் அந்தோணி, வீரகேரளம்புதூர் போலீசில் சரண் அடைந்தார்.

ஊரடங்கு நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பெண்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story