எருமப்பட்டி அருகே விவசாயி கொலையில் மாணவர்கள் உள்பட 3 பேர் கைது
எருமப்பட்டி அருகே விவசாயி கொலை வழக்கில் மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
எருமப்பட்டி,
எருமப்பட்டி அருகே விவசாயி கொலை வழக்கில் மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் விசாரணையில் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கரியபெருமாள்புதூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மகன் கவுதமன் (வயது 23). விவசாயி. இவருடைய தங்கை கவுசல்யாவை அதே பகுதியை சேர்ந்த விவசாயி கோபி (24) என்பவர் திருமணம் செய்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவருக்கும், கவுதமனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோபியின் தோட்டத்தில் கவுதமன் இருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார்சைக்கிளில் ராமச்சந்திரன், அவரது தம்பி ரவிச்சந்திரன் (28), காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர், பழையபாளையத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஆகியோர் வந்தனர். முன்விரோதத்தில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கவுதமனை, ராமச்சந்திரன் கத்தியால் குத்தினார். கோபிக்கும் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் 4 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றபோது ராமச்சந்திரனுக்கு காயம் ஏற்பட்டது. இதற்கிடையே படுகாயமடைந்த கவுதமன் பரிதாபமாக இறந்தார்.
கோபி நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 17 மற்றும் 19 வயது வாலிபர் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட ராமச்சந்திரனையும் கைது செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் கோபியின் மனைவி கவுசல்யாவை ராமச்சந்திரன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோபியின் மனைவிக்கு ஒரு சிம் கார்டு கொடுத்ததை அவர் வாங்க மறுத்துவிட்டார். ஆனாலும் அவரது பையில் சிம் கார்டை ராமச்சந்திரன் போட்டார். இந்த சம்பவத்தை தனது அண்ணன் கவுதமன், கணவர் கோபி ஆகியோரிடம் கவுசல்யா தெரிவித்தார். அவர்கள் இதுதொடர்பாக ராமச்சந்திரனை கண்டித்தனர். ஆனால் தனது ஒருதலை காதலை கைவிடாத அவர் கவுதமன் மீது ஆத்திரத்தில் இருந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று தோட்டத்தில் நடந்த தகராறில் கவுதமன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 17 வயது வாலிபர் சமீபத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வை எழுதி உள்ளார். 19 வயது வாலிபர் ஒரு கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story