சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதையை சீரமைத்த குருக்கள் - பொதுமக்கள் பாராட்டு


சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதையை சீரமைத்த குருக்கள் - பொதுமக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 22 April 2020 4:45 AM IST (Updated: 22 April 2020 2:08 AM IST)
t-max-icont-min-icon

கோவில் மணி மற்றும் அர்ச்சனை பொருட்களையே கையில் வைத்து பழக்கப்பட்ட குருக்கள்கள் மண் வெட்டியை எடுத்து தார்சாலையை சீரமைத்ததை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

சென்னிமலை, 

சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல 1,320 படிக்கட்டுகளும், 9 வளைவுகளை கொண்ட 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்சாலையும் உள்ளது. விஷேச நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பலர் வந்து செல்வதுண்டு. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வாகனங்களில் வந்து முருகனை தரிசித்து செல்கிறார்கள். 

தற்போது கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னிமலை முருகன் கோவிலும் கடந்த 27 நாட்களாக மூடப்பட்டுள்ளது. ஆனால் தினமும் 6 கால பூஜைகள் மட்டும் முருகனுக்கு நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி இரவு சென்னிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னிமலை வனப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் முருகன் கோவிலுக்கு செல்லும் தார்சாலையின் பல இடங்களில் மண் நிறைந்தது. இதனால் முருகன் கோவிலுக்கு செல்லும் குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். 

இந்தநிலையில் மலைக்கோவிலுக்கு செல்லும் தார்சாலையை சீரமைக்க சென்னிமலை முருகன் கோவில் குருக்கள் முடிவு செய்தனர். அதன்படி தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட சென்னிமலை கிளை தலைவர் சிவஸ்ரீ மதி சிவாச்சாரியார் தலைமையில், செயலாளர் செல்வம் சிவாச்சாரியார் முன்னிலையில் கோவில் குருக்கள் ஒன்றிணைந்து தார்சாலையை சீரமைத்தனர். கோவில் மணி மற்றும் அர்ச்சனை பொருட்களையே கையில் வைத்து பழக்கப்பட்ட குருக்கள்கள் மண் வெட்டியை எடுத்து தார்சாலையை சீரமைத்ததை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

Next Story