பெருந்துறையில் செயல்படாத விசைத்தறிகள்; ரூ.7 கோடிக்கு ஜவுளி உற்பத்தி பாதிப்பு


பெருந்துறையில் செயல்படாத விசைத்தறிகள்; ரூ.7 கோடிக்கு ஜவுளி உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 22 April 2020 4:15 AM IST (Updated: 22 April 2020 2:18 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை பகுதியில் செயல்படாத விசைத்தறிகளால் ரூ.7½ கோடிக்கு ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

பெருந்துறை, 

பெருந்துறை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளான சீனாபுரம், கராண்டிபாளையம், சுள்ளிப்பாளையம், மேட்டுப்பாளையம், விஜயமங்கலம், கள்ளியம்புதூர், திங்களூர், பெரிய வீரசங்கிலி, சின்ன வீரசங்கிலி, கைக்கோளபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு ஏற்றுமதி ரக துணிகள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், விசைத்தறிகள் செயல்படவில்லை. இதனால் கடந்த ஒரு மாதமாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இதேபோல் விசைத்தறி உரிமையாளர்களும் தொழில் முடங்கி உள்ளதால் சிரமப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து விஜயமங்கலம கள்ளியம்புதூரை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் ஆனந்த் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக விசைத்தறிகள் செயல்படாமல் உள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு ரூ.7½ கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், 5 ஆயிரம் தொழிலாளர்களும் வேலை இழந்து உள்ளனர். இந்த சூழ்நிலையில் வருமானமின்றி தவித்துக்கொண்டிருக்கும் தங்களது தொழிலாளர்களை காப்பாற்ற, விசைத்தறி உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்காக தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் ரூ.1,000 கடனாக வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக்கொள்ள வழிவகை செய்கிறோம்.

இந்த கொடிய வைரஸ் தொற்று பரவலை நாம் எதிர்பார்க்கவில்லை. கண்ணுக்கு தெரியாத இந்த எதிரியை எதிர்த்து போராடுவதில் நாம் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே முதல் கடமை. அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்டாலும், கொரோனா தொற்று முழுமையாக நீங்கும் வரை அனைவரும் பொறுமை காப்பது மிகவும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story