செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு வந்தவர் கொரோனாவால் பலியாகி விட்டார்.
தாம்பரம்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர், வானகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இந்தநிலையில் குரோம்பேட்டையை சேர்ந்த 70 வயது முதியவரும், கொரோனா தொற்று காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
பலியான இவருடைய மனைவிக்கும், மேலும் குரோம்பேட்டை பத்மாவதி நகரில் 31 வயது இளம்பெண் ஒருவருக்கும், திருக்கழுக்குன்றத்தில் வசிக்கும் தனியார் தொலைக்காட்சி ஊழியர் ஒருவருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
3 பேரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
கல்லீரல் சிகிச்சைக்கு வந்தவர்
குரோம்பேட்டையில் கொரோனாவால் பலியான 70 வயது முதியவர், பக்ரைன் நாட்டில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவரது மகனும், மகளும் அதே நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். இவரது சகோதரிகள் 2 பேர் சென்னை அசோக் நகரிலும், குரோம்பேட்டையிலும் வசித்து வருகிறார்கள். இவருக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது.
உறவினர் ஒருவர் கல்லீரல் தானம் செய்வதாக கூறியதால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக மார்ச் மாதம் பக்ரைனில் இருந்து மும்பை வந்த அவர், பின்னர் மனைவியுடன் ஏப்ரல் மாதம் 3-ந்தேதி மும்பையில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். அசோக் நகரில் உள்ள சகோதரி வீட்டில் தங்கி குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையில் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதியானது. உடனடியாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று காலை உயிரிழந்தார்.
குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது உறவினர் ஒருவர் மட்டும் இதில் கலந்து கொண்டார்.
ஆலந்தூர்
ஆலந்தூர் ஆசர்கானாவை சேர்ந்த ஒருவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது குடும்பத்தினருக்கு நடத்திய சோதனையில் அவரது மகள் மற்றும் சகோதரிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஒரே பகுதியில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஆசர்கானா பகுதியில் உள்ள அவர்கள் வசிக்கும் தெருவுக்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி சார்பில் அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரேபிட் கருவி மூலம் பரிசோதனை செய்ததில் வேறு யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என தெரியவந்தது. சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் மகேஷன் அந்த பகுதியில் ஆய்வு செய்தார்.
புதுமாப்பிள்ளை
சென்னை கோயம்பேட்டை சேர்ந்த 27 வயது டிரைவருக்கு 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இதற்கிடையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.
புதுமாப்பிள்ளையும், அவருடைய மனைவியும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் அவர், கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்யும் தனது தாயை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று வந்துள்ளார். இதனால் அவரது தாயையும் தனிமைப்படுத்தி ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. புளியந்தோப்பில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று வந்ததில் இருந்துதான் புதுமாப்பிள்ளை உடல்நலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
Related Tags :
Next Story