விவசாய பணிகளை முடக்கி போட்ட ஊரடங்கு உரம் கிடைக்காமல் திண்டாடும் விவசாயிகள்
ஊரடங்கு விவசாய பணிகளை முடக்கி போட்டுள்ளது. உரம் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வருகிறார்கள்.
மெலட்டூர்,
ஊரடங்கு விவசாய பணிகளை முடக்கி போட்டுள்ளது. உரம் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வருகிறார்கள்.
கோடை சாகுபடி
தஞ்சை மாவட்டம் பாபநாசம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது கோடை பருவத்தையொட்டி பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறைந்த அளவே தண்ணீர் தேவை என்பதால் நெல், உளுந்து பயிருக்கு மாற்றாக பருத்தி பயிரை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பருத்தியை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகளால் எளிதாக விற்பனை செய்ய முடிகிறது. பருத்தி சாகுபடியில் அதிக லாபமும் கிடைக்கிறது. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஒரு குவிண்டால் பருத்திக்கு ரூ.6,500 வரை விலை கிடைக்கிறது.
உரமிட வேண்டிய நேரம்
பாபநாசம் பகுதியில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் பருத்தி அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் அரையபுரம், ராஜகிரி, பண்டாரவாடை, தேவராயன்பேட்டை, வளத்தாமங்களம், மட்டையான்திடல், மதகரம், நிறைமதி, பொன்மான்மேய்ந்தநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் பலநூறு ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு உள்ளது.
இந்த பகுதியில் பருத்தி விதை விதைக்கப்பட்டு தற்போது 40 நாட்களை கடந்து விட்டது. இந்த நேரத்தில் விவசாயிகள் பருத்தி செடிகளுக்கு டி.ஏ.பி., பொட்டாஷ், யூரியா ஆகியவை உரங்களை கலந்து இடுவார்கள். அதேபோல நெற்பயிர்களுக்கும் இது உரமிட வேண்டிய நேரமாகும்.
ஊரடங்கால் திண்டாட்டம்
இந்த நிலையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் அரசு வேளாண்மை உர கிடங்குகள், உரக்கடைகள் சரிவர திறக்கப்படுவது இல்லை. திறந்திருக்கும் கடைகளிலும் போதுமான அளவு உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வருகிறார்கள். ஊரடங்கால் உர தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாய பணிகள் முடங்கி உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒரு சில தனியார் உர வியாபாரிகள் தட்டுப்பாட்டை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு உரங்களை விற்று வருவதாகவும், விவசாயிகளுக்கு தேவையான பொட்டாஷ், யூரியா, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் தட்டுபாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
நடவடிக்கை
நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு தற்போது உரமிட வேண்டி உள்ளது. இந்த நேரத்தில் பருத்தி செடிக்கு உரம் வைத்து மண் அணைக்காவிட்டால் வளர்ச்சி பாதிக்கப்படும். அதுபோல கோடை நெற்பயிரில் களை எடுத்து உரமிட வேண்டிய பருவம் இதுவாகும்.
ஆனால் தற்போது உர தட்டுப்பாடு காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை அரசு அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Related Tags :
Next Story