போலீஸ் நிலைய பாதுகாப்பு பெட்டக பூட்டை உடைத்து மதுபானம் திருடிய 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலைய பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 மதுபாட்டில்களை திருடியதாக 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருவொற்றியூர்,
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதை பயன்படுத்தி ஆங்காங்கே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனர். அவர்களை போலீசார் தீவிரமாக கண் காணித்து மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை போலீசார் இவ்வாறு சட்டவிரோதமாக விற்பனை செய்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பூட்டி வைத்து இருந்தனர். கடந்த 15-ந்தேதி பாதுகாப்பு பெட்டகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த 50 மதுபாட்டில்கள் திருடப்பட்டுஇருந்தது.
போலீஸ் நிலையத்திலேயே நடந்த இந்த திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அதே போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக வேலைபார்த்த திருவொற்றியூர் சாத்துமா நகரைச் சேர்ந்த முருகவேல் (வயது 55) மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் குடியிருப்பை சேர்ந்த போலீஸ்காரர் முத்து (35) ஆகியோர்தான் போலீஸ் நிலையத்தில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தின் பூட்டை உடைத்து 50 மது பாட்டில்களை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் துறை ரீதியாக விசாரணை நடத்திய வடக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் கபில்குமார் சி.சாரத்கர், போலீஸ்காரர்கள் முருகவேல், முத்து ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story