சுகாதார பணியாளர்கள், ஊழியர்களை அழைத்துச்செல்லும் அரசு பஸ் டிரைவர்களுக்கு கவச உடை


சுகாதார பணியாளர்கள், ஊழியர்களை அழைத்துச்செல்லும் அரசு பஸ் டிரைவர்களுக்கு கவச உடை
x
தினத்தந்தி 22 April 2020 5:17 AM IST (Updated: 22 April 2020 5:17 AM IST)
t-max-icont-min-icon

சுகாதார பணியாளர்கள், ஊழியர்களை பணிக்கு அழைத்துச்செல்லும் அரசு பஸ் டிரைவர்களுக்கு கவச உடைகள் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர், 

சுகாதார பணியாளர்கள், ஊழியர்களை பணிக்கு அழைத்துச்செல்லும் அரசு பஸ் டிரைவர்களுக்கு கவச உடைகள் வழங்கப்பட்டன. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இது வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் இந்தியாவில் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது. இந்த உத்தரவு அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைக்காக காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க வருபவர்கள் தவிர மற்றவர்களை போலீசார் விரட்டி விடுகின்றனர். அதையும் மீறி தேவையில்லாமல் வாகனங்களில் வருபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அரசு பஸ் டிரைவர்கள்

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் தனியார் நிறுவனங்கள், தியேட்டர்கள், கோவில்கள் மூடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. தஞ்சையில் உள்ள பல்வேறு துறை அரசு ஊழியர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பணியாற்றி வருகிறார்கள். தற்போது பஸ்கள் ஓடாததால் இவர்கள் சென்று வருவதற்காக மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சையில் இருந்து இந்த பஸ்கள் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பூதலூர், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களை இயக்கும் டிரைவர்களுக்கு ஏற்கனவே முககவசம், கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

கவச உடை

தற்போது அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் பொன்முடி, பொது மேலாளர் ஜெயராஜ்லிங்கமணி ஆகியோர் உத்தரவின் பேரில் கிளை மேலாளர்கள் ரவிச்சந்திரன், மகேஸ்வரன், கணேசன், செந்தில்குமார் ஆகியோர் கவச உடைகளை பஸ் டிரைவர்களுக்கு நேற்று வழங்கினர். அதன்படி கவச உடைகளை அணிந்து டிரைவர்கள் பஸ்சை இயக்கினர்.

Next Story