கொரோனாவை வென்ற 88 வயது மூதாட்டி குமரியில் 3-வது நோயாளி குணமடைந்தார்
குமரியில் 88 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று நீங்கியது. இதன் மூலம் 3-வது கொரோனா நோயாளியாக அதிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளார்.
நாகர்கோவில்,
குமரியில் 88 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று நீங்கியது. இதன் மூலம் 3-வது கொரோனா நோயாளியாக அதிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளார்.
16 பேர் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் முதன் முதலில் 5 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் மூலமாக அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள், பக்கத்து வீடுகளைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று பரவியது. அவர்கள் அனைவரும் தற்போது ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியின் கொரோனா நோயாளிகள் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து கொரோனா நோயாளிகள் வசித்த பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதி மக்கள் வெளியே செல்லவும், வெளியில் உள்ள மக்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கும் அனுமதி இல்லை.
மேலும் கொரோனா நோயாளிகளுடன் முதல்நிலை, இரண்டாம் நிலையில் தொடர்பில் இருந்தவர்கள், பழக்கப்பட்டவர்கள், தொடர்ந்து சில நாட்கள் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் ஆகியவற்றால் சிரமப்படுபவர்கள், மாவட்டம் முழுவதும் நிமோனியா தொற்று உள்ளவர்கள் என பலருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2 பேர் மீண்டனர்
பாதிப்புக்குள்ளான 16 பேரில் அனந்தசாமிபுரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 14-ந் தேதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.
இதற்கிடையே முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவருக்கு கொரோனா இல்லை என்பது இரண்டு முறை நடந்த பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்த 2 பேரில் ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டுள்ளார் என்பது நேற்று முன்தினம் நடந்த பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து 24 மணி நேரத்தில் செய்ய வேண்டிய மேலும் ஒரு பரிசோதனை நேற்று நடந்தது. அதிலும் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியானது.
மூதாட்டிக்கும் தொற்று நீங்கியது
இந்த நிலையில் 88 வயது மூதாட்டிக்கு நேற்று முன்தினம் நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. நேற்றும் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவர் நோய்த்தொற்றில் இருந்து மீண்டுள்ளார் என்பது தெரியவந்தது. 88 வயதிலும் இவர் கொரோனாவை வென்றுள்ளார். இவருக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று (புதன்கிழமை) மீண்டும் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதிலும் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டால் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.
16 கொரோனா பாதிப்பு நோயாளிகளில் 3 பேர் குணமடைந்து இருப்பது அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவலை அறிந்த கொரோனா பாதிப்பு நோயாளிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
19 போலீசாருக்கு சோதனை
இந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் வார்டு, தொற்றுநோய் பிரிவு வார்டு, தனிமைப்படுத்தும் வார்டு ஆகியவற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் 19 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நேற்று 39 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. நேற்று 6 பேர் தொற்றுநோய் பிரிவு வார்டு மற்றும் தனிமைப்படுத்துதல் வார்டு போன்றவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நாகர்கோவிலைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ராமநாதபுரத்தில் இருந்து 27-ந் தேதி வந்துள்ளான். அவன் தற்போது காய்ச்சல், உடல் நடுக்கத்துடன் வந்து ஆஸ்பத்திரியில் வந்து சேர்ந்துள்ளான். அவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவன் ஏற்கனவே இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவன் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story