வாகனங்களை ஒப்படைக்க பணம் வசூலித்ததால் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் திடீர் பணியிடை நீக்கம் - வேலூர் சரக டி.ஐ.ஜி. நடவடிக்கை
வாகனங்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க பணம் வசூலித்ததால் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரை திடீரென பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டி.ஐ.ஜி.காமினி உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் கடந்த 17-ந் தேதி முதல் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. வாகனங்களை ஒப்படைக்கும்போது உரிமையாளர்களிடம் போலீசார் லஞ்சம் வாங்க கூடாது. அதனை மீறி பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் அதனை பொருட்படுத்தாமல் வாகனங்களை ஒப்படைக்க பணம் வசூலித்த வேலூர் சத்துவாச்சாரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார், ஏட்டு மணிமேகலை ஆகியோர் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் வேலூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் ஆயுதப்படைக்கும், வேலூர் வடக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, பனமடங்கி போலீஸ் நிலையத்துக்கும், பாகாயம் போலீஸ் நிலைய எழுத்தராக பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மேல்பாடி போலீஸ் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதனை நேற்று பணியிடை நீக்கம் செய்து டிஐ.ஜி.காமினி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளிக்க வந்த நபருக்கும், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது புகார் அளிக்க வந்தவரை திடீரென மஞ்சுநாதன் தாக்கி உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் டி.ஐ.ஜி.காமினிக்கு புகார் அளித்துள்ளார். அதுகுறித்து விசாரணையில் அந்த சம்பவம் உண்மை என்று தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து மஞ்சுநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story