வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வல்லுனர் குழு ஆய்வு


வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வல்லுனர் குழு ஆய்வு
x
தினத்தந்தி 22 April 2020 3:30 AM IST (Updated: 22 April 2020 5:51 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வல்லுனர் குழு ஆய்வு செய்தனர்.

வாலாஜா,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் வசிக்கும் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோர் வசிக்கும் பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலமாக, அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருப்பதால், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக வல்லுனர் குழுவைச் சேர்ந்த நிர்மல் மற்றும் யுவராஜ், டாக்டர் மீனா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது தனிமைப்படுத்தப்பட்ட வார்டு, பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கும் சிகிச்சை முறை, உணவு வழங்கும் முறை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தனர். கொரோனா தொற்று அதிகமானால், அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க போதிய வசதிகள் உள்ளதா? எனக் கேட்டறிந்தனர். அங்குள்ள பழைய கட்டிட வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது வாலாஜா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சிங்காரவேலு, கொரோனா கட்டுப்பாட்டு அறை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், கொரோனா மாவட்ட தொடர்பு அதிகாரி பிரகாஷ் அய்யப்பன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, மேல்விஷாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகளை குழுவினர் ஆய்வு செய்தனர்.

Next Story