ஊரடங்கு உத்தரவால் குண்ணத்தூர், ஆவூரில் கோரைப்பாய்கள் விற்பனையாகாமல் தேக்கம் - தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை
கொரோனா ஊரடங்கால் குண்ணத்தூர், ஆவூரில் தயாரிக்கப்பட்ட கோரைப்பாய்கள் அதிகளவில் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேட்டவலம்,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த குண்ணத்தூர் கிராமத்தில் கோரைப்பாய்களை தயாரிக்கும் 15-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு, நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கோரைப்பாய்கள் தயாரிக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திர மாநிலத்துக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. சைக்கிளில் பாய் விற்பனை செய்பவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இக்கிராமத்தில் உள்ளனர். கோரைப்பாய் தொழிற்சாலையை நம்பி 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர்.
தற்போது கொரோனா ஊரடங்கால் வாகனப் போக்குவரத்து இல்லை. இதனால் பாய்கள் தயாரிப்புக்கான கோரை, நூல் சாயமேற்றுதல் ஆகியவைகள் வெளியிடங்களில் இருந்து வர வேண்டி உள்ளது. அவைகள் வராததால் கோரைப்பாய்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து அன்றாட பிழைப்பை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
தயாரிக்கப்பட்ட பாய்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பாய் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருபவர்களில் ஒரு சிலர் மட்டுமே அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் தங்களின் பெயரை பதிவு செய்துள்ளனர். அதிலும் ஒருசிலர் தங்களின் பதிவைப் புதுப்பிக்காமல் உள்ளனர். அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி ரூ.1000 தங்களுக்கும் கிடைக்குமா? என பாய் தயாரிப்பு தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதேபோல் வேட்டவலத்தை அடுத்த ஆவூர் கிராமத்திலும் கோரைப்பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆவூரில் 250-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. அதில் 350-க்கும் மேற்பட்ட எந்திரங்கள் மூலம் கோரைப்பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. கோரைப்பாய் தொழிலில் கோரை தரம் பிரித்தல், சாயம் போடுதல், பாய் ஓரம் நாடா அடித்தல் எனப் பல்வேறு பணிகளில் நேரடியாக, மறைமுகமாக 1,500 மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரைப்பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. தயாரிக்கப்பட்ட கோரைப்பாய்கள் விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருவாரூர், கும்பகோணம், வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது அமலில் உள்ள ஊரடங்கால் கோரைப்பாய் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் ஒரு மாதமாக வேலை வாய்ப்பை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
ஊரடங்குக்கு முன்பே தயாரிக்கப்பட்ட கோரைப்பாய்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பாமல் 2 லட்சத்துக்கு மேற்பட்ட கோரைப்பாய்கள் குடோனில் தேக்கமடைந்துள்ளன. இதனால் தயாரிப்பாளர்களும், வியாபாரிகளும் கவலையில் உள்ளனர். கோரைப்பாய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தினமும் ரூ.400-லிருந்து ரூ.500 வரை வருமானம் கிடைத்து வந்தது. கடந்த ஒரு மாதமாக வேலை வாய்ப்பு இல்லாததால் வருமானத்துக்கே வழியில்லாமல் தவித்து வருகின்றனர். எனவே கோரைப்பாய் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவியை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story