ஆரணி வைகை ரேஷன் கடையில், ரூ.500-க்கு மளிகைப் பொருள் தொகுப்பு பை - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் விற்பனையை தொடங்கி வைத்தார்


ஆரணி வைகை ரேஷன் கடையில், ரூ.500-க்கு மளிகைப் பொருள் தொகுப்பு பை - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் விற்பனையை தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 April 2020 3:45 AM IST (Updated: 22 April 2020 5:51 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி வைகை ரேஷன் கடையில் ரூ.500-க்கு மளிகைப் பொருள் தொகுப்பு பை விற்பனையை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

ஆரணி,

ஆரணி அண்ணா சிலை அருகில் உள்ள வைகை கூட்டுறவு பண்டக சாலை ரேஷன் கடையில் தமிழக அரசு சலுகை விலையில் வழங்கும் மளிகைப் பொருள் தொகுப்பு பையை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் ரேஷன் கடைகள் மூலம் சலுகை விலையில் மளிகைப் பொருட்களை ஏழை எளிய மக்கள் பெற்று பயனடைய வேண்டும் என்பதற்காக அரசு இத்திட்டத்தைத் தொடங்கி உள்ளது.

மளிகைப் பொருள் தொகுப்பு பைகள் விற்பனை தொடக்க நிகழ்ச்சி ஆரணியில் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டுறவுத் துறை மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், துணைப்பதிவாளர் பிரேம், சார்பதிவாளர்கள் கல்யாணகுமார், முர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி வைகை கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் பி.ஆர்.ஜி.சேகர் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று ரூ.500-க்கு துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, சீரகம், உப்பு, பூண்டு, மிளகாய்தூள் உள்ளிட்ட 19 வகையான மளிகைப் பொருள் அடங்கி தொகுப்பு பையை வழங்கி, விற்பனையைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,633 ரேஷன் கடைகளில் 45 ஆயிரம் பேருக்கு விற்பனை செய்ய மளிகைப் பொருள் தொகுப்பு பைகள் வந்துள்ளது, என்றார்.

அதைத்தொடர்ந்து மேற்கு ஆரணி ஒன்றியம் ராந்தம் கிராமத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள், இருளர் சமுதாயத்தினர் என 100 பேருக்கு அமைச்சர் தனது சொந்த செலவில் 10 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பை, முகக் கவசம், கையுறை, சோப்பு ஆகியவற்றை வழங்கினார்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் ஆவின் துணைத் தலைவர் பாரி பி.பாபு, நகர கூட்டுறவு வங்கி தலைவர் அசோக்குமார், அரசு வக்கீல் கே.சங்கர், மேற்கு ஆரணி ஒன்றியக்குழுத் தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் அரையாளம் எம்.வேலு, ஊராட்சி மன்றத் தலைவர் குமரவேல், மாவட்ட கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் கஜேந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வைகை கூட்டுறவு சங்க செயலாளர் பிச்சம்மாள் நன்றி கூறினார்.

Next Story