அணைகளில் போதிய தண்ணீர் உள்ளதால் ஊட்டியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது - நகராட்சி அதிகாரிகள் தகவல்
அணைகளில் போதிய தண்ணீர் உள்ளதால், ஊட்டியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் நகரில் 700-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் இயங்கி வருகின்றன. சுற்றுலா நகரமான ஊட்டியின் குடிநீர் தேவையை பல்வேறு அணைகள் பூர்த்தி செய்து வருகிறது.
நீலகிரியில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, ஒரே ஆண்டில் 2, 3 முறை நிரம்பி வழிந்ததை காண முடிந்தது. ஊட்டியில் பார்சன்ஸ்வேலி அணை, மார்லிமந்து அணை, டைகர்ஹில் அணை, தொட்டபெட்டா அப்பர் அணை ஆகியவை முக்கிய அணைகளாக உள்ளது. நடப்பாண்டில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை போதிய அளவு பெய்யவில்லை.
இருந்தாலும், அணைகளில் தண்ணீர் இருப்பு அதிகமாக உள்ளது. ஊட்டி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வரும் பார்சன்ஸ்வேலி அணையில் 34 அடிக்கு தண்ணீர் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 32 அடியாக இருந்தது. சமீபத்தில் வனப்பகுதிகளில் மழை பெய்ததால் 2 அடிக்கு நீர்மட்டம் அதிகரித்து இருக்கிறது. டைகர்ஹில் அணையில் 25 அடிக்கும், மார்லிமந்து அணையில் 10 அடிக்கும், தொட்டபெட்டா அப்பர் அணையில் 15 அடிக்கும் தண்ணீர் உள்ளது. மேலும் தொட்டபெட்டா லோயர் அணை, கோடப்பமந்து லோயர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.
வழக்கமாக ஊட்டி சுற்றுலா தலங்களில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறும். கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் மூடப்பட்டு இருக்கின்றன. சுற்றுலா பயணிகள் வரவில்லை. கடந்த ஆண்டு கோடை சீசனில் ஊட்டிக்கு 10 லட்சம் பேர் வந்தனர். அதனால் குடிநீர் அதிகளவில் தங்கும் விடுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
தற்போது தங்கும் விடுதிகள் மூடப்பட்டு உள்ளதாலும், சுற்றுலா பயணிகள் இல்லாததாலும் தண்ணீர் வினியோகிக்க வேண்டியது இல்லை. இதனால் அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. மேலும் அனைத்து வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கும் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story