வாலிபருக்கு தொற்று உறுதி: மிரட்டுநிலையில் மேலும் 20 பேருக்கு கொரோனா பரிசோதனை 8 கி.மீ. சுற்றளவுக்கு தீவிர கண்காணிப்பு
வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மிரட்டுநிலையில் மேலும் 20 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அரிமளம்,
வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மிரட்டுநிலையில் மேலும் 20 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 8 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உட்பட்ட பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
தடுப்புகள் அமைப்பு
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், மிரட்டுநிலை கிராமத்தில் டெல்லி சென்று வந்த ஒருவரின் 23 வயது மகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மிரட்டுநிலை கிராமம் நேற்று முன்தினம் முதல் தனிமைப்படுத்தப்பட்டது. கிராமத்திற்குள் வெளியாட்கள் யாரும் வர முடியாதவாறு 1½ கி.மீ. தூரத்திற்கு முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மக்களும் வீட்டை விட்டு வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள், பால் உள்ளிட்டவை குறித்து ஊரில் உள்ள மளிகைக்கடைக்காரர்களிடம் போனில் தகவல் தெரிவித்தால் அவர் நேரடியாக வீடுகளுக்கு கொண்டு வந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ முகாம்
மேலும் தடையின்றி குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மிரட்டுநிலையில் பொதுமக்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்த கொதிப்பு மற்றும் சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமில் மருந்துகள் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அங்கு செயல்படும் மருத்துவ குழுவினரின் பரிந்துரைக்கு பின்னரே வெளி இடங்களில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
அங்கு நடமாடும் ஏ.டி.எம். மையமும் இன்று (புதன்கிழமை) முதல் செயல்பட உள்ளது.
மேலும் 20 பேருக்கு பரிசோதனை
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வாலிபர் வீட்டின் அருகில் உள்ள 24 பேருக்கு நேற்று முன்தினம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் நேற்று மேலும் 20 பேருக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சளி, ரத்த மாதிரிகள் புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், சுகாதாரத்துறை இணை இயக்குனர் அர்ஜூன்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மிரட்டுநிலை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார பணிகளை கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார்.
8 கி.மீ. சுற்றளவு
ஆய்வுக்கு பின் அவர் கூறுகையில், “மிரட்டுநிலையை சுற்றியுள்ள 8 கி.மீ. சுற்றளவிற்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி மற்றும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதி முழுவதும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் வகையில் ஆர்.டி.பி.சி.ஆர். கருவி வைக்கப்பட்டுள்ளது. இதை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் ஐ.சி.எம்.ஆர். சான்றிதழுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் அனுமதி வரப்பெற்றவுடன் இன்னும் ஒருசில நாட்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே கொரோனா வைரசிற்கான பரிசோதனை செய்து, அதற்கான அறிக்கை கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 480 எண்ணிக்கையில் வரப்பெற்றுள்ளது. இந்த கருவியானது 7 நாட்களுக்கு மேலாக அறிகுறிகளுடைய நபர்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் யாருக்கு இருந்தாலும் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் தெரியப்படுத்த வேண்டும்”என்றார்.
அதிகாரிகள்
இந்த ஆய்வின் போது, போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலமுரளி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story