நச்சலூரில் முன்விரோதத்தில் பயங்கரம்: பால் வியாபாரி அரிவாளால் வெட்டிக்கொலை 4 பேர் கைது


நச்சலூரில் முன்விரோதத்தில் பயங்கரம்: பால் வியாபாரி அரிவாளால் வெட்டிக்கொலை 4 பேர் கைது
x
தினத்தந்தி 22 April 2020 10:30 AM IST (Updated: 22 April 2020 10:30 AM IST)
t-max-icont-min-icon

நச்சலூரில் முன்விரோதத்தால் பால்காரர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நச்சலூர், 

நச்சலூரில் முன்விரோதத்தால் பால்காரர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பால்காரர்

கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள நங்கவரம் பேரூராட்சி, தெற்கு மாடுவிழுந்தான்பாறையை சேர்ந்தவர் ராசு என்ற வடிவேல். இவரது மகன் அன்பு என்ற அன்பழகன் (வயது 30). பால் வியாபாரியான இவர், தினமும் தனது மோட்டார்சைக்கிளில் சென்று நச்சலூர், மாடுவிழுந்தான் பாறை பகுதிகளில் உள்ள வீடுகளில் பால் விற்பனை செய்து வந்துள்ளார்.

நச்சலூர் பகுதியில் உள்ள சொட்டல் கீழ்நந்தவனகாட்டை சேர்ந்த கதிரேசன் (21), வினோத் (19), ராஜேஷ் (20), குமார் (21) ஆகியோருக்கும், அன்பழகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அரிவாளால் வெட்டிக்கொலை

இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல அன்பழகன் தனது மோட்டார்சைக்கிளில் நச்சலூரில் உள்ள சொட்டல் கீழ்நந்தவன காடு பகுதியில் ஒரு வீட்டில் பால் கறந்து கொண்டு, விற்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் நின்ற கதிரேசன் உள்ளிட்ட 4 பேரும் அன்பழகனை வழிமறித்தனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் அன்பழகனை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து, முதுகு பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக இறந்தார்.

அன்பழகன் இறந்ததை உறுதி செய்த 4 பேரும், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அன்பழகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு கும்மராஜா, லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நச்சலூர் கிராம நிர்வாக அதிகாரி ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

4 வாலிபர்கள் கைது

பின்னர் அன்பழகனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கரூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் லக்கி, மோப்பம் பிடித்தவாறு பல மீட்டர் தூரம் ஓடிச்சென்று படுத்து கொண்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதற்கிடையே, அன்பழகனை கொலை செய்ததாக, கதிரேசன், வினோத், ராஜேஷ், குமார் ஆகிய 4 பேரும் குளித்தலை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அன்பழகனுக்கும், 4 வாலிபர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த 4 பேரும் சேர்ந்து அன்பழகனை கொலை செய்தது தெரியவந்தது.

பரபரப்பு

கொலை செய்யப்பட்ட அன்பழகனுக்கு தங்கமணி (24) என்ற மனைவியும், சிவானிக்காஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர். இந்த பயங்கர கொலை சம்பவத்தால் நச்சலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குளித்தலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story