ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் அருண் எச்சரிக்கை


ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் அருண் எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 April 2020 12:53 PM IST (Updated: 22 April 2020 12:53 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் ஊரடங்கு விதிமுறைகளை மீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுவை கலெக்டர் அருண் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 3 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் நல்ல நிலையில் உள்ளனர்.

புதுவை மாநிலத்தில் 9 லட்சம் பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. விதிமுறைகளை மீறியதாக 32 மதுபான விற்பனை கடைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து மதுபான பார்கள், குடோன்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுறுத்தி உள்ளோம்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தொழிற்சாலைகள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளதால் தளர்வு என்ற பெயரில் தற்போது ஒரு சில ஆட்டோக்கள், பூக்கடைகள் போன்றவை இயங்க தொடங்கி உள்ளன. இது முற்றிலும் விதிமுறை மீறலாகும். கடந்த 2 நாட்களாக மக்கள் வெளியில் நடமாடுவது அதிகமாக உள்ளது. யாரும் விதிகளை மீறக் கூடாது. அப்படி மீறினால் கடும் நடவடிக்கை எடுப்போம்.

அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். பேரிடர் நிதியிலிருந்து ரூ.2 கோடியே 30 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. அந்த நிதியில் ரூ.2 கோடி சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் அருண் கூறினார்.

சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் கூறுகையில், ‘மதுபான விற்பனை தொடர்பாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சிலர் பொய் புகார் கொடுத்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொழிற்சாலைகள் அரசின் அனுமதி பெற்றுதான் இயங்க வேண்டும்’ என்றார்.

Next Story