வில்லியனூர் பகுதியில் போலீசார் கெடுபிடி: ஊரடங்கை மீறியதாக ஒரே நாளில் 145 பேர் மீது வழக்கு
வில்லியனூர் பகுதியில் ஊரடங்கை மீறியதாக நேற்று ஒரே நாளில் 145 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வில்லியனூர்,
புதுவையில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால் ஊரடங்கில் போலீசாரின் கெடுபிடி கடந்த சில நாட்களாக தளர்த்தப்பட்டது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சில தொழிற்சாலைகள், கட்டுமான பணிகள் நேற்று முன்தினம் முதல் செயல்படுகின்றன. அரசு அலுவலகங்களும் இயங்குகின்றன. சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டாலும் வருகிற 3-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், அரசு ஊழியர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். காலை நேரத்தில் அவர்கள் இருசக்கர வாகனங்களில் சென்றனர். இவர்களுடன் பொதுமக்களும் சென்றதால் நேற்று புதுவையின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதனை தடுக்கும் வகையில் கெடுபிடியை மீண்டும் அதிகரிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு, முக கவசம் அணியாதவர்கள், அத்தியாவசியம் இன்றி ஊர் சுற்றியவர்களின் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திர குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் வில்லியனூர் புறவழிச்சாலை, திருக்கனூர், மதகடிப்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஊரடங்கை மீறியதாக இருசக்கர வாகனங்களில் வந்த 125 பேர் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர். அவர்களுக்கு நீதிமன்றத்தில் அபராதம் செலுத்துவதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது. வில்லியனூர் போலீசார் 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஒட்டுமொத்தமாக நேற்று ஒரே நாளில் வில்லியனூர் பகுதியில் 145 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி - கடலூர் சாலையில் முருங்கப்பாக்கம் சந்திப்பில் முதலியார்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அத்தியாவசியமின்றி ஊர் சுற்றியவர்களுடைய மோட்டார் சைக்கிள்களின் சாவியை பறித்துக்கொண்டனர். பின்னர் அவர்களை எச்சரிக்கை செய்து, அனுப்பி வைத்தனர்.
கடந்த 25-ந் தேதி முதல் ஊரடங்கை மீறியதாக தவளக்குப்பத்தில் 189 பேர், கிருமாம்பாக்கத்தில் 143 பேர், பாகூரில் 204 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story