அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரண உதவி - நாராயணசாமி அறிவிப்பு
புதுவையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.ஆயிரமும், கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரமும் நிவாரணம் வழங்க உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி,
புதுவையில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது 3 பேர் மட்டும்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் உத்தரவுகளை போட்டு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறோம். தொழிற்சாலைகளை திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளை நிறைவேற்றினால்தான் தொழிற்சாலைகள் திறக்க அனுமதிக்கப்படும்.
100 நாள் வேலைத்திட்டம் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். கட்டுமானத் தொழிலாளர்களும் பணி செய்து வருகின்றனர். ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கி உள்ளோம். சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் வழங்கப்படும்.
ஊரடங்கினால் ஏழை தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் வழங்க உள்ளோம். இந்த தொகை அவர்களது வங்கிக் கணக்கில் இன்று (புதன் கிழமை) செலுத்தப்படும். இதன் மூலம் 28,160 பேர் பயன் பெறுவர்.
இதேபோல் கட்டிட தொழிலாளர்களுக்கு அவர்களது வைப்பு நிதியில் இருந்து தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 42,351 குடும்பங்கள் பயன்பெறும். ஒட்டுமொத்தமாக அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் என 70 ஆயிரம் குடும்பங்கள் பயனடைவார்கள்.
புதுவை மாநிலத்தில் கடுமையான நிதி நெருக்கடி நிலவும் நேரத்தில் மாநில அரசின் நிதியிலிருந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறோம். இதுவரை மத்திய அரசு நிதி ஏதும் தரவில்லை. கடைகள் திறக்கப்படாததால் மாநில வருவாய் குறைந்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு நிதி தந்து உதவிட வேண்டும். இதுவரை 250 தொழிற்சாலைகள் இயங்க அனுமதி கேட்டுள்ளனர். அவர்கள், அரசால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நிறைவேற்ற உறுதி அளிக்காததால் யாருக்கும் அனுமதி தரவில்லை.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
Related Tags :
Next Story