“எங்கள் வசந்த காலத்தை கொரோனா பறித்து விட்டது” - கல்லூரி மாணவர்கள் ஆதங்கம்


“எங்கள் வசந்த காலத்தை கொரோனா பறித்து விட்டது” - கல்லூரி மாணவர்கள் ஆதங்கம்
x
தினத்தந்தி 23 April 2020 5:30 AM IST (Updated: 22 April 2020 11:33 PM IST)
t-max-icont-min-icon

“எங்கள் வசந்த காலத்தை கொரோனா பறித்து விட்டது“ என்று கல்லூரி மாணவர்கள் ஆதங்கத்துடன் கூறினர்.

தூத்துக்குடி, 

உலகம் முழுவதும் உலுக்கி கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு வருகிற 3-ந் தேதி வரை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளே முடங்கி கிடப்பவர்களின் மனம் சோர்வடைந்து உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் பட்டாம்பூச்சிகளாக பறந்து திரியும் கல்லூரி மாணவ-மாணவிகளின் எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள மாணவ-மாணவிகளை தொடர்பு கொண்டோம். அதன் விவரம் வருமாறு:-

தூத்துக்குடி கல்லூரி மாணவர் தெய்வநாயகம் கூறியதாவது:-

நான் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பி.ஏ இறுதி ஆண்டு படித்து வருகிறேன். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அவசியம். அதனை புரிந்து கொண்டு நாங்கள் வீடுகளில் அடங்கி உள்ளோம். கல்லூரியின் வசந்தகாலம் இது. 3 ஆண்டுகளாக பழகி வந்த நண்பர்களை நினைவில் இருந்து நீக்க முடியாமல் பிரியாவிடை பெறக்கூடிய காலம் இது. கொரோனா வைரஸ் எங்களின் வசந்த காலத்தை பறித்துக் கொண்டது. பல நண்பர்களை பார்க்க முடியவில்லை. செல்போனில் மட்டுமே பேசி வருகிறோம். கல்லூரி ஆண்டுவிழா, பிரியாவிடை விழாக்கள் அனைத்தையும் இழந்து விட்டோம்.

அதேபோன்று தற்போது ஆன்லைன் மூலம் பாடம் நடத்துகிறார்கள். நேரில் படிப்பதற்கும், ஆன்லைன் மூலம் படிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நம்மை நேரில் கண்காணிக்க ஆள் இல்லை. இதனால் நம் கவனங்கள் சிதற வாய்ப்பு அதிகம். இறுதி செமஸ்டர் என்பதால் சற்று தயக்கமாகவும் உள்ளது. மேலும், அவ்வப்போது கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருடன், கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறேன். இதனால் ஓரளவுக்கு மன நிம்மதி கிடைக்கிறது. மற்ற நேரங்களில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் பேசி பொழுதை கழித்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடி கல்லூரி பி.காம் இரண்டாம் ஆண்டு மாணவி ஷீபா கூறியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளியில் செல்ல முடியவில்லை. ஆஸ்பத்திரிக்கு செல்வதாக இருந்தாலும் பல கெடுபிடிகளை தாண்டிதான் செல்ல வேண்டி உள்ளது. இதுவரை நான் இதுபோன்ற ஒரு ஊரடங்கை சந்தித்தது இல்லை. அப்பாவும் வேலைக்கு செல்ல முடியவில்லை. வருமானம் இல்லாததால் கஷ்டமாகவும் உள்ளது. குடும்பத்தினருடன் இருந்து பொழுதை கழித்து வருகிறேன். அவ்வப்போது சமையல் வேலைகளையும் கற்றுக் கொள்கிறேன்.

கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. பாடங்கள் நடத்தப்படவில்லை. தற்போது ஆன்லைன் மூலம் கற்பிக்கிறார்கள். இதனால் எப்படி படிக்கப்போகிறேன் என்றே தெரியவில்லை. கல்லூரி தோழிகளை சந்திக்க முடியவில்லை. எப்போதாவது போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். கல்லூரி நாட்களை இழந்த வருத்தம் உள்ளது. சீனியர் மாணவிகளுக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பும் வாய்ப்பு இல்லை. கல்லூரி ஆண்டு விழாவுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. விழா நடப்பதற்குள் கொரோனா வைரஸ் அனைவரையும் வீடுகளுக்குள் அடைபட வைத்து விட்டது. இதனால் விழாவும் நடக்கவில்லை. கல்லூரியில் பல மகிழ்ச்சியான தருணங்களை இழந்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடி கல்லூரி மாணவர் சதீஷ்குமார் கூறியதாவது:-

நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். கல்லூரிக்கு செல்லும்போது, பெரும்பாலும் இரவு நேரம் மட்டுமே குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். அப்போதுகூட சில நேரங்களில் வேலைக்கு சென்று விட்டு அப்பா வருவதற்கு தாமதமாகி விடும். ஆனால் ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் இருக்கிறோம். குடும்பத்தோடு, பழைய நினைவுகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொள்கிறோம். மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்லூரி நண்பர்களை சந்திக்க முடியவில்லை. உள்ளூரில் உள்ள நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், கல்லூரிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து நண்பர்கள் வருகின்றனர். இதனால் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் வாட்ஸ்-அப்பில் தகவல்களை பரிமாறிக் கொள்கிறோம். சில நேரங்களில் செல்போன்களில் பேசிக் கொள்வோம். ஆனாலும் நாங்கள் கல்லூரி நாட்களை மிகவும் இழந்து இருப்பது வேதனையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சாத்தான்குளத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஜாபிரின் பிரீசி கூறுகையில், “கல்லூரி நாட்களில் வீட்டு வேலைகளை செய்வதற்கு நேரம் கிடைப்பது இல்லை. தற்போது, குடும்பத்தோடு அமர்ந்து நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைத்து உள்ளது. அம்மாவுக்கு உதவியாக சமையல் வேலைகளை செய்து கொடுக்கிறேன். புதிய சமையல்களை நானும் கற்றுக் கொள்கிறேன். வீட்டின் அருகில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ் பாடத்தை கற்றுக் கொடுக்கிறேன். பாடங்களை நிதானமாக புரிந்து படித்து பார்ப்பதற்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. கடவுளை அதிக நேரம் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

Next Story