சமூக இடைவெளியை பின்பற்ற மூலனூர் அரசு பள்ளி வளாகத்தில் வாரச்சந்தை
சமூக இடைவெளியை பின்பற்ற மூலனூர் அரசு பள்ளி வளாகத்திற்கு வாரச்சந்தை மாற்றப்பட்டது.
மூலனூர்,
திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை மூலனூர் அண்ணாநகரில் புதன்கிழமைதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த வாரச்சந்தைக்கு தாராபுரம், வெள்ளகோவில், தாசநாயக்கன்பட்டி, சின்னதாராபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் காய்கறிகள், மளிகை பொருட்கள், பழவகைகள், மற்றும் விவசாயக்கருவிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.
மூலனூர், நத்தப்பாளையம், பெரமியம், கிளாங்குண்டல், போளரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். தற்போது மூலனூரில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டு, பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு மக்கள் பெருமளவில் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் மூலனூர் வாரச்சந்தையில் பொது மக்கள் கூட்டம் கூடாமல் இருக்க வேண்டி சில வாரங்கள் பேரூராட்சி நிர்வாகம் மூலனூரில் வாரச்சந்தையை தடை விதித்திருந்தது. இதனால் பொது மக்கள் காய்கறிகள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பொது மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
அதனால் பொது மக்களின் வசதிக்காகவும் அதே வேளையில் கொரோனா பாதிப்பில் இருந்த தப்ப போதிய சமூக இடைவெளி தேவையால் போதிய இட பற்றாக்குறையால் இந்த வாரம் மூலனூர் வாரச்சந்தை மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பாக நடைபெற்றது. இதில் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்களிடம் முககவசம் அணிய வேண்டும், கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவவேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
Related Tags :
Next Story