செங்குன்றம் அருகே, வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை - 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
செங்குன்றம் அருகே வாலிபரை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோலையம்மன் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை. கட்டிடத்தொழிலாளி. இவருடைய இளைய மகன் பாலாஜி(வயது 24). இவர், பெயிண்டிங் வேலை செய்து வந்தார். நேற்று பாலாஜி, தனது வீட்டில் இருந்து சோலையம்மன் நகர் 10-வது தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கும்பல் கையில் பட்டாக்கத்திகளுடன் தயாராக நின்றனர். அவர்களை கண்டதும் பாலாஜி, அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் 6 பேர் கொண்ட கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டி பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் தலை, தோள்பட்டை, கால் ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பாலாஜி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
தப்பி ஓட்டம்
பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த ஒரு சிலர் மட்டும் அந்த வழியாக சென்றனர். பாலாஜி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, சோழவரம் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான பாலாஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம்
இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் வாலிபரை வெட்டிக்கொன்ற மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆராய்ந்து வருகிறார்கள். மேலும் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பாலாஜி மீது சோழவரம், செங்குன்றம் போலீஸ் நிலையங்களில் அடிதடி வழக்குகள் இருப்பதும், அடிக்கடி அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்களிடம் பாலாஜி தகராறில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. எனவே இந்த முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச்சேர்ந்த வாலிபர்கள் இவரை வெட்டிக்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
தலைமறைவாக உள்ள 6 பேர் கொண்ட கும்பலை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story