ராயபுரம் மண்டலம் முதலிடம்: சென்னையில் 373 பேர் கொரோனாவால் பாதிப்பு - இதுவரை 8 பேர் பலி


ராயபுரம் மண்டலம் முதலிடம்: சென்னையில் 373 பேர் கொரோனாவால் பாதிப்பு - இதுவரை 8 பேர் பலி
x
தினத்தந்தி 23 April 2020 3:46 AM IST (Updated: 23 April 2020 3:46 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 373 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 1,629 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 662 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை பெண்கள் 33.87 சதவீதமும், ஆண்கள் 66.13 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் 30 வயது முதல் 39 வயதினரை அதிகம் குறிவைக்கிறது. அடுத்ததாக 20 முதல் 29 வயதினரும், 40 முதல் 59 வயதினரும் அடுத்தடுத்ததாக பாதிக்கப்பட்டுள்ளன.

9 வயது வரை உள்ள குழந்தைகள் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 80 வயதுக்கு மேல் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராயபுரம் முதலிடம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலம் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பத்தூர் நேற்று முன்தினம் தனது முதல் கணக்கை தொடங்கியதையடுத்து, மணலி மண்டலமும் நேற்று தனது முதல் கணக்கை தொடங்கியுள்ளது. இந்த 2 மண்டலங்களிலும் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் திருவொற்றியூர் மண்டலத்தில் 13 பேரும், மாதவரம் மண்டலத்தில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

8 பேர் இறப்பு

இதேபோல் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 46 பேர், திரு.வி.க நகர் மண்டலத்தில் 45 பேர், அண்ணாநகர் மண்டலத்தில் 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 44 பேர், கோடம்பாக்கம் மண்டலத்தில் 36 பேர், வளசரவாக்கம் மண்டலத்தில் 10 பேர், ஆலந்தூர், அடையாறு மண்டலங்களில் தலா 7 பேர், பெருங்குடி மண்டலத்தில் 8 பேர், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வேறு மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் சென்னையில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளார். இதுவரை சென்னையில் கொரோனா தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆகும். மேலும் 103 பேர் பூரணமாக குணமடைந்து சென்னை மண்டலத்தில் வீடு திரும்பியுள்ளனர்.

Next Story