ஊரடங்கால், வீதிக்கு வந்த தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று முககவசம் விற்கிறார்கள்


ஊரடங்கால், வீதிக்கு வந்த தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று முககவசம் விற்கிறார்கள்
x
தினத்தந்தி 23 April 2020 3:55 AM IST (Updated: 23 April 2020 3:55 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால், வாழ்வாதாரத்தை இழந்துள்ள தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் வீதி, வீதியாக சென்றும், சாலையோரங்களிலும் முககவசம் விற்பனை செய்து வருகிறார்கள்.

தஞ்சாவூர், 

ஊரடங்கால், வாழ்வாதாரத்தை இழந்துள்ள தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் வீதி, வீதியாக சென்றும், சாலையோரங்களிலும் முககவசம் விற்பனை செய்து வருகிறார்கள்.

ஊரடங்கால், வேலை இழந்த தொழிலாளர்கள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து தொழிலாளர்களும் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.

இதனால் அன்றாடங்காய்ச்சிகள் தங்கள் குடும்பத்தை நடத்துவதற்கே மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள். இதில் தையல் தொழிலாளர்கள், சாலையோரம் கடை வைத்து நடத்துபவர்கள், பூட்டு, டார்ச் லைட் பழுது பார்ப்பவர்கள் என அனைவருமே அன்றாடம் கிடைக்கும் வருமானத்தை நம்பியே தங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். கடந்த 29 நாட்களாக இவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குடும்பம் நடத்த சிரமம்

இதனால் இந்த தொழிலாளர்கள் அனைவரும் குடும்பம் நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகிறார்கள். பல தையல் தொழிலாளர்கள் முககவசம் தைத்து தங்கள் கடைகளில் விற்பனை செய்தனர். தற்போது அதுவும் விற்பனையாகாததால் வீதி, வீதியாக சென்று விற்பனை செய்கிறார்கள்.

இதேபோல் பூட்டு விற்பனை செய்யும் தொழிலாளர்களும் தங்கள் குடும்பத்தை நடத்துவதற்காக சாலையோரங்களில் நின்று கொண்டு முக கவசம் விற்பனை செய்து வருகிறார்கள்.

பல்வேறு சிறிய வியாபாரிகளும் கூட தற்போது முககவசங்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

பல வண்ணங்களில் முககவசம்

தஞ்சை நகரில் உள்ள தையல் தொழிலாளர்கள் பலரும் முககவசங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். சில தொழிலாளர்கள் தங்களின் கடைகளிலேயே தைத்து விற்பனைக்காக தொங்க விட்டுள்ளனர். ஆரம்பத்தில் அது அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டாலும், தற்போது பல வண்ணங்களில் கிடைப்பதால் மக்கள் அதனைத்தான் விரும்பி வாங்குகிறார்கள். தற்போது சாலையோரங்களிலும், முக கவசம் விற்பனை செய்பவர்களின் கைகளிலும் வண்ண, வண்ண முக கவசங்கள் காணப்படுகிறது.

இது குறித்து வீதி, வீதியாக சென்று முககவசம் விற்கும் கரந்தையை சேர்ந்த தையல் தொழிலாளி ஈஸ்வரன் கூறுகையில், “நான் கடந்த 20 வருடமாக தையல் தொழில் செய்து வருகிறேன். ஊரடங்கு காரணமாக கடந்த 29 நாட்களாக கடையை மூடிவிட்டேன். எனக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சம்பாதிக்க வேண்டுமே? அதற்காகத்தான் வீதி, வீதியாக சென்று முககவசம் விற்பனை செய்து வருகிறேன்.

சிறிதளவு வருமானம்

ஆரம்பத்தில் நானே முககவம் தயாரித்து விற்பனை செய்தேன். ஆனால் பனியன் துணியால் ஆன முககவசங்களைத்தான் அதிக அளவில் மக்கள் விரும்புகிறார்கள். அதுவும் பல வண்ணங்களில் வேண்டும் என கேட்கிறார்கள். இதனால் திருப்பூரில் இருந்து தயாரித்து வரும் முககவசங்களை வாங்கி நான் விற்பனை செய்து வருகிறேன். இதில் சிறிதளவு வருமானம் கிடைக்கிறது.

இதையும் செய்யாமல் வீட்டில் இருந்தால் குடும்பம் நடத்துவது எப்படி? என்பதால் தான் சிறிய வருமானம் கிடைத்தாலும், குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையாவது வாங்கலாம் என இதனை செய்து வருகிறேன்”என்றார்.

Next Story