முத்துப்பேட்டை அருகே பரிதாபம் மாத்திரை வாங்க 10 கி.மீ. நடந்து சென்ற தொழிலாளி சுருண்டு விழுந்து பலி


முத்துப்பேட்டை அருகே பரிதாபம் மாத்திரை வாங்க 10 கி.மீ. நடந்து சென்ற தொழிலாளி சுருண்டு விழுந்து பலி
x
தினத்தந்தி 23 April 2020 4:00 AM IST (Updated: 23 April 2020 4:00 AM IST)
t-max-icont-min-icon

மாத்திரை வாங்குவதற்காக 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற தொழிலாளி ரோட்டில் சுருண்டு விழுந்து பலியானார்.

முத்துப்பேட்டை,

மாத்திரை வாங்குவதற்காக 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற தொழிலாளி ரோட்டில் சுருண்டு விழுந்து பலியானார்.

முத்துப்பேட்டை அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

10 கி.மீ. நடந்து சென்ற தொழிலாளி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் பகுதியை சேர்ந்தவர் தில்லைக்கண்ணு(வயது 56). கூலித்தொழிலாளியான இவர் நெஞ்சு வலிக்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்தநிலையில் மருந்து, மாத்திரைகள் தீர்ந்து விட்டதால் அதை வாங்குவதற்காக நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டார்.

ஊரடங்கினால் பஸ்கள் எதுவும் இயங்காததால் வீட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள முத்துப்பேட்டைக்கு நடந்தே சென்றார். சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து சென்ற அவர், முத்துப்பேட்டை யூனியன் அலுவலகம் செல்லும் சாலை அருகே சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார்.

பரிதாப சாவு

உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் அதிகாரி கஜேந்திரன், கிராம நிர்வாக அதிகாரி செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இதுகுறித்து தில்லைக்கண்ணுவின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதபடி அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் தில்லைக்கண்ணுவின் உடலை ஒப்படைத்தனர். இறந்த தில்லைக்கண்ணுவிற்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துப்பேட்டை அருகே மாத்திரை வாங்க சென்ற தொழிலாளி வெயிலில் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story