மயிலாப்பூரில் மெக்கானிக் குத்திக்கொலை - கஞ்சா கும்பல் வெறிச்செயல்
சென்னை மயிலாப்பூரில் மெக்கானிக் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை மயிலாப்பூர் கபாலி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்த்(வயது 17). இவர் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் மெக்கானிக் தொழில் செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் கஞ்சா போதைக்கு அடிமையான சிலருடன் வசந்த்துக்கு தகராறு ஏற்பட்டது.
அப்போது வசந்தின் தாயார் பற்றி சிலர் தவறாக பேசியதாக தெரிகிறது. இதையொட்டி வசந்த் அவர்களுடன் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில், நேற்று முன்தினம் இரவு தனியாக இருக்கும் போது வசந்த் தாக்கப்பட்டார்.
கத்தியால் அவர் சரமாரியாக குத்தப்பட்டார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த சம்பவம் தொடர்பாக இணை கமிஷனர் சுதாகர் உத்தரவின்பேரில் மயிலாப்பூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வசந்தை கொலை செய்ததாக, கஞ்சா கும்பலைச் சேர்ந்த 8 பேரை போலீசார் தேடினார்கள். அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.
கைது செய்யப்பட்ட கொலையாளிகள் அனைவரும் ஏற்கனவே சிறு, சிறு குற்றங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவர்கள். கொரோனாவையொட்டி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட சிறை கைதிகளில் இவர்களும் அடங்குவார்கள்.
இந்த சம்பவம் மயிலாப்பூர் கபாலி தோட்டம் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story