கொரோனா அச்சுறுத்தல்: முககவசம் அணிந்து நாற்று நடும் பெண்கள்


கொரோனா அச்சுறுத்தல்: முககவசம் அணிந்து நாற்று நடும் பெண்கள்
x
தினத்தந்தி 23 April 2020 4:10 AM IST (Updated: 23 April 2020 4:10 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் காரைக்குடி பகுதியில் பெண்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கொண்டு நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காரைக்குடி, 

மாவட்டத்தில் கிணற்று பாசன முறையில் கோடைகால நெல் பயிரிடும் பணியை விவசாயிகள் தொடங்குவது உண்டு. அந்த வகையில் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர், பள்ளத்தூர், மணச்சை, சாக்கோட்டை, பீர்கலைக்காடு, புதுவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் ஏர் உழுதல் மற்றும் நெல் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கொரோனா அச்சுறுத்தலால் நெல் நடவு செய்யும் பெண்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு முககவசம் அணிந்த நிலையில் விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காரைக்குடி அருகே கோவிலூர் பகுதி விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:- காரைக்குடி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் தற்போது கிணற்று பாசனத்தை நம்பி கோடைகால விவசாயத்தை தொடங்கி உள்ளோம்.

தற்போது ஊரடங்கு காரணமாக இதற்கு முன்பு மத்திய அரசின் சார்பில் விவசாய தொழிலுக்கும் தடை இருந்து வந்தது. கடந்த 21-ந்தேதி முதல் விவசாய தொழிலுக்கு விலக்களிக்கப்பட்டது. இதையடுத்து இந்த பகுதியில் உள்ள பெண் விவசாய தொழிலாளர்களை வைத்து விவசாயத்தை தொடங்கி உள்ளோம். இந்த பகுதியில் தற்போது குண்டு அரிசி ரக நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 

மேலும் ஆழ்துளை கிணற்று பாசனம் மூலமும் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்களை சமூக இடைவெளியுடன் முக கவசத்துடன் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் சமூக விலகலுடன் முக கவசம் அணிந்து கொண்டு விவசாய பணிகளை செய்து வருகின்றனர். 

தற்போது இந்த பகுதியில் கூட்டுறவு சங்கங்கள் இயங்காத நிலையில் அதிக விலை கொடுத்து உரங்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இது ஒருபுறம் இருக்க தற்போது ஊரடங்கு காரணமாக இந்த விவசாய தொழிலுக்கு வேலையாட்கள் கிடைப்பதற்கும் பெரும் சிரமம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story