வேளாண்மைதுறையின் பரிந்துரை இல்லாமல் ரசாயன மருந்து பயன்படுத்தக்கூடாது அதிகாரி அறிவுரை
வேளாண்மைதுறையின் பரிந்துரை இல்லாமல் ரசாயன மருந்து பயன்படுத்தக்கூடாது என வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் கூறினார்.
திருத்துறைப்பூண்டி,
வேளாண்மைதுறையின் பரிந்துரை இல்லாமல் ரசாயன மருந்து பயன்படுத்தக்கூடாது என வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் கூறினார்.
பருத்தி சாகுபடி
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் சம்பா அறுவடை முடித்த பின் நஞ்சை தரிசில் வாய்ப்புள்ள இடங்களில் பருத்தி சாகுபடி செய்ய வேளாண்மை துறை ஊக்கப்படுத்தி வருகிறது. நிலத்தடி நீர் ஆதாரம் உள்ள கிராமங்களில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்கின்றனர். பருத்திக்கு சில ஆண்டுகளாக நல்ல விலை கிடைப்பதால் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200 ஏக்கர் அளவிற்கு பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வெப்பம் அதிகமாக இருப்பதால் மாவுப்பூச்சியின் தாக்குதலில் இருந்து பருத்தியை பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சூரியகாந்தி விதைகள்
இதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பனையூரில் அட்மா திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் பருத்தி சாகுபடி குறித்த செயல்விளக்கம் நடந்தது.
அப்போது பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழி முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி வைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், சூரிய சக்தியில் இயங்கும் விளக்கு பொறிகளை அமைத்து இரவு நேரத்தில் பூச்சிகளை கவர்ந்திழுத்து அழித்தல், இயற்கை பூச்சி விரட்டி மூலிகை கரைசல் தயாரித்து பயன்படுத்துதல், பஞ்சகாவ்யா தயாரித்து பயிரில் வளர்ச்சி ஊக்கி பயன்படுத்துதல் ஆகிய தொழில்நுட்பங்கள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
வயல் வரப்பு ஓரங்களில் சூரியகாந்தி பயிரிட்டு அதன் மூலம் அதிக அளவில் நன்மை செய்யும் பூச்சிகளை உற்பத்தி செய்து இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து விவசாயிகளுக்கும் சூரியகாந்தி விதைகள் வழங்கப்பட்டது.
ரசாயன மருந்து
இதில் வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் கலந்து கொண்டு செயல் விளக்கங்களை செய்து காட்டினார். அப்போது அவர் கூறியதாவது:-
பருத்தி சாகுபடியில் ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தலாம். வேளாண்மைதுறையின் பரிந்துரை இல்லாமல் ரசாயன மருந்து பயன்படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வேளாண்மை உதவி அலுவலர் சிவரஞ்சனி, அட்மா திட்ட தொழில் நுட்ப மேலாளர் வேதநாயகி, உதவி தொழில்நுட்ப மேலாளர் சவுமியா மற்றும் விவசாயிகள் மார்ட்டின், கம்பர், காமராஜ் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story