உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிப்பதில் தாமதம்: கவர்னருடன் பட்னாவிஸ் திடீர் சந்திப்பு - மராட்டிய அரசியலில் பரபரப்பு


உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிப்பதில் தாமதம்: கவர்னருடன் பட்னாவிஸ் திடீர் சந்திப்பு - மராட்டிய அரசியலில் பரபரப்பு
x
தினத்தந்தி 23 April 2020 5:01 AM IST (Updated: 23 April 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் கவர்னரை சந்தித்து பேசியது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பை,

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி ஏற்று 5 மாதங்களாகியும், அரசியலமைப்பு சட்டத்தின்படி இன்னும் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.எல்.சி.யாகவோ தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கிறார். 9 எம்.எல்.சி. காலியிடங்களுக்கு நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த தேர்தல் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து, கடந்த 9-ந் தேதி கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருக்கும் எம்.எல்.சி. பதவியில் உத்தவ் தாக்கரேயை நியமிக்க கோரி கவர்னருக்கு மந்திரி சபை பரிந்துரை செய்தது.

ஆனால் உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சியாக நியமிக்காமல் கவர்னர் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த விவகாரத்தில் கவர்னரையும், பாரதீய ஜனதாவையும் சிவசேனா சாடி வருகிறது.

கவர்னருடன் பட்னாவிஸ் சந்திப்பு

இதற்கிடையே உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்க கோரும் மந்திரிசபை பரிந்துரையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பாரதீய ஜனதாவை சேர்ந்த ஒருவர் தொடர்ந்த வழக்கில் மும்பை ஐகோர்ட்டு மந்திரி சபை பரிந்துரைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்தநிலையில், மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பாரதீய ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் நேற்று திடீரென ராஜ்பவனில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார்.

இருப்பினும் இருவரும் என்ன பிரச்சினை தொடர்பாக பேசி கொண்டனர் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் கவர்னரை சந்தித்து இருப்பது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் மாநிலத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் நிலைமை மற்றும் பால்கரில் நடந்த கும்பலால் சாமியார்கள் உள்பட 3 பேர் கொலையான சம்பவம் ஆகியவை குறித்தே கவர்னருடன் பட்னாவிஸ் விவாதித்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story