மராட்டியத்தில் முகாம்களில் தவிக்கும் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்ப சிறப்பு ரெயில்கள் - மத்திய அரசுக்கு, உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
மராட்டியத்தில் முகாம்களில் தவிக்கும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரெயில்கள் விடுமாறு மத்திய அரசை உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
கொரோனா ஊரடங்கு காரணமாக மராட்டியத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வேலை இழந்து தவிக்கும் இந்த தொழிலாளர்கள் தங்களை தங்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்குமாறு வற்புறுத்தி வருகிறார்கள்.
கொரோனா பாதிப்பில் முதலிடம் வகிக்கும் மாநிலம் மராட்டியம் என்பதால், இந்த பயமும் அவர்கள் மத்தியில் தொற்றி உள்ளது. கடந்த 15-ந் தேதி மும்பை பாந்திரா ரெயில் நிலையம் அருகே திரண்ட 1,000-க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறு போராட்டம் நடத்தியும், அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைந்து போக செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சொந்த ஊர் அனுப்ப...
இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மத்திய குழுவுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார். அப்போது உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களுக்கு மராட்டிய அரசு தங்குவதற்கு வசதி ஏற்படுத்தி கொடுத்து உள்ளது. அங்கு அவர்கள் நல்லமுறையில் கவனிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆனால் அந்த தொழிலாளர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வருகிற 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 15-ந் தேதி வரை கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் என்று மத்திய அரசு உணர்ந்தால், இங்கு சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை அதற்கு முன்னர் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்ப பரிசீலிக்க வேண்டும். இது தொடர்பாக வழிகாட்டுதல்களையும் வெளியிட வேண்டும். இது தொடர்பாக சரியான நேரத்துக்குள் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்.
பாதுகாப்பு உபகரணங்கள்
துபாய் மற்றும் அமெரிக்கா வழியாக தான் மராட்டியத்திற்கு கொரோனா நுழைந்தது.
தற்போது அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் துபாயில் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பதை ஆராய வேண்டும்.
மராட்டியத்துக்கு மத்திய அரசு அதிகளவில் பாதுகாப்பு உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் தர வேண்டும். ரேஷன் கார்டுகள் இல்லாதவர்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதற்கு மத்திய அரசின் விதிகள் தளர்த்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு ரெயில்கள்
இதற்கிடையே முதல்-மந்திரி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு சிறப்பு ரெயில்களை விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது.
சமீபத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் சர்க்கரை ஆலை தொழிலாளர்களை தங்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க மராட்டிய அரசு முடிவு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story