ஊரடங்கிலும் திருவெண்காடு பகுதியில் நிலக்கடலை அறுவடை செய்யும் பணி தீவிரம்
ஊரடங்கிலும் திருவெண்காடு பகுதியில் நிலக்கடலை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவெண்காடு,
ஊரடங்கிலும் திருவெண்காடு பகுதியில் நிலக்கடலை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிலக்கடலை அறுவடை செய்யும் பணி
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கால் பெரும்பாலான துறைகள் முடங்கி உள்ளன. ஆனால், உணவு பொருட்கள் தேவை என்பதை கருத்தில் கொண்டு விவசாய பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு விதிவிலக்கு அளித்துள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் அவசியம் என்பதை உணர்ந்து தொடர்ந்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் திருவெண்காடு அருகே மங்கைமடம், எம்பாவை, ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள், தங்களது விளைநிலத்தில் பயிரிட்ட நிலக்கடலையை ஊரடங்கிலும் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் பயிரிடப்பட்ட நிலக்கடலை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து எம்பாவை கிராமத்தை சேர்ந்த விவசாயி கருணாநிதி கூறியதாவது:-
இயற்கை முறையில் சாகுபடி
எம்பாவை கிராமத்தில் சுமார் 250 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. எனது 2 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் நிலக்கடலையை சாகுபடி செய்துள்ளேன். இதனால் தற்போது நல்ல மகசூல் கிடைத்துள்ளது. அதாவது ஒரு ஏக்கரில் பாரம்பரிய நாட்டு கடலையை பயிரிட்டதில் சுமார் 36 மூட்டைகள் மகசூல் கிடைத்துள்ளன.
சமூக விலகலை கடைபிடித்தும், சோப்பு போட்டு கைக்கழுவ செய்தும் அறுவடை பணி நடந்தது. தற்போது உள்ள காலக்கட்டத்தில் நாம் சாப்பிடும் உணவில் எதிர்ப்பு சக்தி இருந்தால் மட்டுமே கொரோனா போன்ற வைரஸ் தொற்றை தவிர்க்க முடியும். இதற்கு சிறந்த வழி விவசாயிகள், இயற்கை முறையில் விளைபொருட்களை சாகுபடி செய்வதுதான் தீர்வாகும்.
நல்ல மகசூல்
அப்போதுதான் கொரோனா போன்ற வைரஸ் தாக்காமல் தடுக்க எதிர்ப்பு சக்தி நமது உடலுக்கு கிடைக்கும். மேலும் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் விளைபொருட்கள் நல்ல மகசூல் கொடுக்கும்.
மண்ணின் தன்மையும் மாறாமல் இருக்கும். இதன் மூலம் நாம் விளைவிக்கும் பொருட்களுக்கு இயற்கை முறையில் மண் சத்து கிடைக்கும். மாற்றாக வீரிய ரக ரசாயன உரங்களை கொண்டு விளைவிக்கப்படும் விளைபொருட்களை பொதுமக்கள் சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. மேலும் மண்ணின் தன்மையும் பாதிக்கும். எனவே, விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்தை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story