பாதராயனபுரா சம்பவத்திற்கு சாதி-மத சாயம் பூசக்கூடாது - சித்தராமையா பேட்டி


பாதராயனபுரா சம்பவத்திற்கு சாதி-மத சாயம் பூசக்கூடாது - சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 23 April 2020 5:36 AM IST (Updated: 23 April 2020 5:36 AM IST)
t-max-icont-min-icon

“பாதராயனபுரா சம்பவத்திற்கு சாதி-மத சாயம் பூசக்கூடாது” என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு, 

பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் தொகுதியில் ஏழை மக்களுக்கு உணவு தானியம் வழங்க அத்தொகுதி எம்.எல்.ஏ. ராமலிங்கரெட்டி ஏற்பாடு செய்திருந்தார். அதை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

“கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பசித்தவர்களுக்கு உணவு வழங்குவதாக அரசு சொல்கிறது. ஆனால் காங்கிரஸ் தொகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு சரியான முறையில் உணவு வினியோகம் செய்யப்படவில்லை. ராமலிங்கரெட்டி நெருக்கடி கொடுத்த காரணத்தால் அவரது தொகுதிக்கு தினமும் 5,000 உணவு பொட்டலங்கள் வழங்குகிறார்கள்.

பாரபட்சம்

பெங்களூருவில் மட்டும் 3 லட்சம் கூலித்தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் கர்நாடக அரசு தினமும் 1 லட்சம் பேருக்கு மட்டுமே உணவு பொட்டலங்களை வழங்குகிறது. உணவு மற்றும் உணவு தானியங்கள் வழங்குவதில் மாநில அரசு பாரபட்சத்துடன் செயல்படுகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் பா.ஜனதா கவுன்சிலர்கள், தங்களுக்கு தேவைப்படுவோருக்கு மட்டும் உணவுகளை வழங்குகிறார்கள். கர்நாடக முழுவதும் இத்தகைய பாரபட்சத்துடன் அரசு நடந்து கொள்கிறது.

பசி என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியானது. கொரோனா சாதி, மதம் பார்த்து வருவது இல்லை. அது அனைத்து மதத்தினரையும் தாக்குகிறது. இத்தகைய நெருக்கடியான நிலையில் மாநில அரசு மிகுந்த பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். பசித்த அனைவருக்கும் உணவு வழங்குவது அரசின் கடமை.

தக்க தண்டனை

பெங்களூரு பாதராயனபுராவில் நடந்த வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. தவறை யார் செய்திருந்தாலும் அது தவறுதான். அதை நாங்கள் நியாயப்படுத்த மாட்டோம். ஆனால் அந்த வன் முறைக்கு சாதி, மத சாயம் பூசக்கூடாது. தவறு செய்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்கள் தான் உண்மையான வீரர்கள். அவர்களுக்கு நாம் அனைவரும் வணக்கம் செலுத்த வேண்டும்.

அவர்கள் அல்லும்-பகலும் கொரோனாவை எதிர்த்து போராடுகிறார்கள். அவர்களை தாக்குபவர்கள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை. மருத்துவத்துறையினருக்கு நாம் அனைத்து ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்.

அரசுக்கு ஆதரவு

ஏழைகளுக்கு வழங்கப்படும் அரிசியை கொண்டு சானிடைசர் திரவம் தயாரிக்கும் மத்திய அரசின் முடிவு சரியல்ல. அந்த சானிடைசர் தயாரிக்க வேறு பொருட்களை பயன்படுத்த வேண்டும். அரிசி அதிகமாக இருந்தால் அதை ஏழைகளுக்கு வினியோகம் செய்ய வேண்டும். வேறு வழியே இல்லை என்றால் சானிடைசர் தயாரிக்க அரிசியை பயன்படுத்தலாம்.

பாதராயனபுரா வன்முறை குறித்து மந்திரி ஈசுவரப்பா அரசியல் உள்நோக்கத்துடன் பேசுகிறார். ஜமீர்அகமதுகான், சி.எம்.இப்ராகிம் உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்களும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விஷயத்தில் அரசுக்கு ஆதரவு வழங்கி வருகிறோம்.”

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story