கொரோனா பரிசோதனைக்காக நாகர்கோவிலில் வியாபாரிகள் 125 பேரின் சளி மாதிரி சேகரிப்பு


கொரோனா பரிசோதனைக்காக நாகர்கோவிலில் வியாபாரிகள் 125 பேரின் சளி மாதிரி சேகரிப்பு
x
தினத்தந்தி 23 April 2020 6:16 AM IST (Updated: 23 April 2020 6:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலைய வியாபாரிகள் 125 பேருக்கு கொரோனா பரிசோதனைக்கான சளி சேகரிக்கப்படுகிறது.

நாகர்கோவில், 

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலைய வியாபாரிகள் 125 பேருக்கு கொரோனா பரிசோதனைக்கான சளி சேகரிக்கப்படுகிறது.

125 வியாபாரிகள்

நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தை ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால் வடசேரி பஸ் நிலையம், சந்தையாக மாற்றப்பட்டது. இந்த சந்தையில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை காய்கறிகள் மற்றும் பழ வகைகள், மளிகை பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. சுமார் 125 வியாபாரிகள் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் வடசேரி பஸ் நிலைய வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கிச் செல்கிறார்கள். இதனால் அவர்கள் மூலமாக தங்களுக்கு கொரோனா வைரஸ் பரவி விடுமோ? என்ற அச்சத்துடனேயே வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து வியாபாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி மொத்தம் உள்ள 125 வியாபாரிகளுக்கு மதியத்துக்கு பிறகு அதாவது அவர்கள் விற்பனையை முடித்தபிறகு இரண்டு நாட்கள் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகளை சேகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.

முதல் நாளில்...

அதன்படி முதல் நாளான நேற்று நாகர்கோவில் வடசேரி நகர்நல மையத்தில் வியாபாரிகளிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அப்போது நகர்நல மைய டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சளி மாதிரி சேகரிக்க பிரத்யேக கூண்டு அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்தபடி வியாபாரிகளிடம் தொண்டை மற்றும் மூக்கு பகுதிகளில் இருந்து சளி மாதிரிகளை சேகரித்தனர். நேற்று மட்டும் 60 வியாபாரிகளிடம் இருந்து சளி சேகரிக்கப்பட்டதாக மாநகர நகர்நல அதிகாரி கின்சால் தெரிவித்தார்.

பின்னர் அந்த சளி மாதிரிகள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. 2-வது நாளாக இன்று (வியாழக்கிழமை) மீதமுள்ள வியாபாரிகளிடம் இருந்தும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட உள்ளன.

Next Story